சென்னை நகரில் போக்குவரத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்.
போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் சென்னை, பெருநகரில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக சென்னை நகர போக்குவரத்து காவல் மற்றும் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 9 மருத்துவமனைகளுடன் இணைந்து 50 மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று காலை புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள அழகப்பா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை (Special Medical Health Camp) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்மருத்துவ பரிசோதனை முகாமில் 250 ஆண் மற்றும் பெண் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், போக்குவரத்து இணை கமிஷனர் ராஜேந்திரன், துணைக்கமிஷனர் சாமேசிங் மீனா மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.