போக்குவரத்து போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறை: துணைக்கமிஷனர் சக்திவேல் துவங்கி வைத்தார்
first aid training for traffick police
சென்னை நகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் நடந்தது.
சென்னை நகரில் சாலைகளில் வாகன விபத்துகள் நிகழும் சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சி கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலம், போக்குவரத்து அமலாக்கப்பிரிவு மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நேற்று காலை, சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகிலுள்ள வர்த்தக அறக்கட்டளை வளாகத்தில், ALERT என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சி குறித்து, தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு, செய்முறையாக செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து தெற்கு துணைக்கமிஷனர் சக்திவேல் பேசுகையில், ‘‘விபத்துக்கள் நிகழும் இடங்களில் விரைந்து செல்லும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் முறையான முதலுதவி சிகிச்சையை முறையாக கற்றறிந்திருப்பது அவசியம் ஆகும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும், உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் பல உயிர்களை காக்கின்ற கடமைகள் காவலர்களுக்கு உள்ளது. அதனால் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் அனைவரும் முதலுதவி குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமில் 311 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டதுடன், No Honking என்ற ஒலி மாசு கட்டுப்பாட்டை மதிப்பேன் என்றும், தேவையில்லாத இடங்களில் வாகன ஹாரன்கள் ஒலிக்கமாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு, மேற்படி உறுதிமொழி படி நடப்பேன் என எழுதி கொடுத்தனர்.