போக்குவரத்து பெண் காவலரின் பணியை பாராட்டி ஓவியம் வரைந்த கல்லூரி மாணவனுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு
காவல்துறையை ஊக்குவிக்கும் விதமாக ஓவியம் வரைந்த கல்லூரி மாணவனுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த அக்ஷிவ் திவேதி (வயது 17) என்ற மாணவர் சென்னை திரு.வி.க.நகர் பகுதியில் வசித்துக் கொண்டு, அரும்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஓவியத்தில் ஆர்வம் கொண்ட அவர் கடந்த 24ம் தேதியன்று கல்லூரிக்குச் செல்லும் வழியில் அண்ணாநகர் பகுதியில் போக்கு வரத்து ஒழுங்குபடுத்தும் பணியிலிருந்த பெண் காவலரின் பணியை கண்டுள்ளார். அவரிடம் சென்று, கடினமான காவல்துறை பணியில் அயராத பணியாற்றி வருவதை பாராட்டியுள்ளார். மேலும் அவரிடம் அனுமதி கேட்டு பெண் காவலரை பென்சிலால் தத்ரூபமாக வரைந்து கொடுத்து வாழ்த்தினார். அதனைக் கண்டு நெகிழ்ந்து போன கமிஷனர் சங்கர்ஜிவால் மாணவர் அக்ஷிவ் திரிவேதியை நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.