Take a fresh look at your lifestyle.

பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் வருவதை தவிருங்கள்: கமிஷனர் சங்கர்ஜிவால் வேண்டுகோள்

70

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கவிருப்பதால் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ளதால் சென்னை நகரில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. சென்னை பெருநகர காவல் சார்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை பெருநகர காவல் சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் ஆளிநர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் 16,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* காவல் அதிகாரிகளின் குழுக்களில் ஒருங்கிணைந்து பணியாற்ற 1,500 ஊர்க்காவல் படையினர் (Home Guard) வரவழைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

* சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புயல், மழை வெள்ளம் குறித்து எச்சரிக்கைகள், அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

* குறிப்பாக பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், விளம்பர பலகைகள் மற்றும் சுறை காற்றினால் பறக்கக் கூடிய பிளாஸ்டிக், இரும்பு தகடு, கட்டுமான பணியில் உள்ள கண்ணாடி மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட இலகு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு ரோந்து வாகன குழுவினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* கடற்கரை பகுதிகளில் மாண்டஸ் புயலின் காரணமாக அலைகள் வேகம் அதிகப் படியாகவும் ஆபத்தான முறையில் இருப்பதினால் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தப் பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

* மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியினருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற காவல் குழுவினர் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

* மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிள் பெரிய பள்ளங்கள், கால்வாய்கள், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் குழுவினர் மூலம் இரும்பு தடுப்புகள் (Barricade) அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* மேலும், மாண்டஸ் புயல் காரணமாக இரும்பு தடுப்புகள் கீழே விழுந்துவிடாத வண்ணம், பறக்காத வண்ணமும், கயிற்றால் கட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.

* 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ரோந்து காவல் வாகனங்கள், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்து, இரும்பு தடுப்புகள் (Barricades) கயிற்றால் கட்டப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* அனைத்து ரோந்து காவல் வாகனங்களிலும், இரும்பு கம்பி, கட்டிங் பிளேயர், டார்ச் லைட் போன்ற அவசர உதவி பொருட்கள் வைத்து மீட்பு பணிகள் மேற்கொள்ள தயார் படுத்தப் பட்டுள்ளது.

* காவல் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் உடனுக்குடன் தகவல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, காவல் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

* போக்குவரத்து சுற்றுக் காவல் ரோந்து வாகனம் மூலம் சுரங்கப்பாதை, மழைவெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு அவ்வப்போது ரோந்து சென்று கண்காணித்து, மழைநீர் அகற்ற மாநகராட்சி குழுவினருடன் சேர்ந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மழைநீர் தேங்கி போக்குவரத்து இடையூறு உள்ள பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைத்தும், மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை பெருநகர காவல்துறையில், சிறப்பு கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு, 044- 23452 372 என்ற சிறப்பு உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கட்டுப்பாட்டறை மூலம் புயல் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் பரிமாற்றப்பட்டு, மீட்பு மற்றும் இடர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.