பொங்கலுக்கு 15 புதிய டிசைன்களில் 1.80 கோடி இலவச வேட்டி, சேலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏழை, எளிய மக்களுக்கு 15 புதிய ‘டிசைன்’களில் இலவச வேட்டி- சேலை வழங்கப்பட உள்ளது. இந்த பணியை ஜனவரி 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் கடந்த 1983-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடங்கப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் மூலம் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேட்டிகளை கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11 ஆயிரத்து 124 பெடல் தறி நெசவாளர்கள் மற் றும் 41 ஆயிரத்து 983 விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப் படுகிறது. இதன் மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் உள்பட 3.59 கோடி மக்களுக்கு இந்த திட்டம் பயன் அளிக்கிறது. இதன்படி 1.80 கோடி வேட்டிகளும், 1.80 கோடி சேலைகளும் வழங்கப்பட உள்ளன. 2023-ம் ஆண்டிற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல் தவணையாக ரூ. 243.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனைமேற்கொண்டார்.
இலவச சேலையில் 15 டிசைன்களும், வேட்டிகளில் 5 டிசைன்களும் கொண்டு அவற்றை தயாரிக்கவும், ஜனவரி 10-ந் தேதிக்குள் அவற்றை மக்களுக்கு வழங்கவும் அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் வேட்டி, சேலைகளின் ஆயுள் காலம் கூடுதலாக இருக்கும் வகையில் தரமான நூலினால் தயாரிக்க இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.