பிரெசில்
கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ‘எப்’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம், 22-ம் நிலை அணியான மொராக்கோவை எதிர்கொண்டது. முதல் வினாடியில் இருந்தே பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர்களே பந்தை கணிசமான நேரம் (67 சதவீதம்) கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதே போல் கார்னரில் இருந்து (9 முறை) பந்தை உதைக்கும் வாய்ப்பும் பெல்ஜியத்துக்கு அதிகமாக கிட்டியது. ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்தி கொள்ள தவறினர். இன்னொரு பக்கம் தற்காப்பு அரணை வலுப்படுத்தி கொண்டு தாக்குதல் பாணியை தொடுத்த மொராக்கோ அணியினர் இடைவிடாது நெருக்கடி கொடுத்தனர். 45-வது நிமிடத்தில் மொராக்கோவின் ஹகிம் ஸியேச் பந்தை வலைக்குள் அனுப்பினார். ஆனால் அவர்களது மகிழ்ச்சி நிலைக்கவில்லை. ரீப்ளேயில் அது ஆப்சைடு என்பது தெரியவந்ததால் அந்த கோல் மறுக்கப்பட்டது.
பிற்பாதியில் இரு அணியினரும் கடுமையாக வரிந்து கட்டினர். ஆனால் அதிர்ஷ்டக்காற்று மொராக்கோ பக்கமே வீசியது. 73-வது நிமிடத்தில் ‘பிரீகிக்’ வாய்ப்பில் இடது பகுதியில் இருந்து மொராக்கோவின் மாற்று ஆட்டக்காரர் அப்டெல்ஹமீத் சபிரி லாவகமாக அடிக்க, அது வலையை முத்தமிட்டு கோலாக மாறியது. இந்த உலகக் கோப்பையில் ‘பிரீகிக்’கில் நேரடியாக வலைக்குள் அடிக்கப்பட்ட முதல் ஷாட் இது தான். பதிலடி கொடுக்க போராடிய பெல்ஜியத்துக்கு 81-வது நிமிடத்தில் அருமையான வாய்ப்பு வந்தது. ஆனால் வெர்டோன்ஜென் பந்தை கம்பத்திற்கு வெளியே அடித்து சொதப்பினார். இதன் பின்னர் கடைசி நிமிடத்தில் மொராக்கோவின் ஜகாரியா அபோக்லால் மற்றொரு கோல் போட்டு பெல்ஜியத்தை நிலைகுலைய வைத்தார்.
முடிவில் ஆப்பிரிக்க தேசமான மொராக்கோ அணி 2- 0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்து முதல் வெற்றியை ருசித்தது. உலகக் கோப்பையில் அந்த அணி பெல்ஜியத்தை சாய்ப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு பெல்ஜியத்துடன் 4 ஆட்டங்களில் மோதி 2-ல் தோல்வியும், 2-ல் டிராவும் சந்தித்து இருந்தது. 2-வது ஆட்டத்தில் விளையாடி முதல் தோல்வியை சந்தித்த பெல்ஜியம் அணி 1-ந்தேதி குரோஷி யாவுக்கு எதிரான கடைசி லீக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
பெல்ஜியத்தின் தோல்வி கால்பந்து ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மொராக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த பெல்ஜியத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பெல்ஜியம் தலைநகர் பிரெசில்சில் கால்பந்து ரசிகர்கள் மொரோக்கோ கொடியை தீவைத்து கொழுத்தினர். மேலும், கார்கள், பைக்குகளுக்கு தீ வைத்தும் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களை கைது செய்தனர்.