Take a fresh look at your lifestyle.

பெற்ற குழந்தையை பாறையில் அடித்து கொன்ற கொடூர தந்தை

49

ஆந்திர மாநிலம், காளஹஸ்தி, வாட்டர் ஹவுஸ் நகரைச் சேர்ந்தவர் முனிராஜா (வயது 22). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுவாதி (19). இவர்களுக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முனிராஜா சுவாதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என சுவாதி கணவரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமல் காலம் கடத்தி வந்தார்.

இன்று அதிகாலை சுவாதி தனது கணவரிடம் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார். அப்போது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மகன் உயிருடன் இருந்தால்தானே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தொந்தரவு செய்வாய் என கூறி, ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் 2 கால்களையும் பிடித்து வெளியே தூக்கி வந்து அருகில் இருந்த பாறையில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே முனிராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுவாதி குழந்தையை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனிராஜை தேடி வருகின்றனர்.