பெண் தலைமைக்காவலருக்கு நட்சத்திரக் காவலர் விருது: கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் வழங்கினார்
whc annalakshmi rewarded star police award by commissioner shankar jiwal ips
நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பெண் தலைமை காவலர் அன்னலட்சுமியை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நட்சத்திர காவலர் விருதுக்கான (Police Star of the Month) பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையிலும் பணிசெய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந் தெடுக்கப் பட்டு, காவல் ஆணையாளர் அவர்கள் மூலம் ரூ. 5 ஆயிரம் பணவெகுமதி மற்றும் செயல்திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில் கடந்த மே மாதத்திற்கான நட்சத்திர காவலர் விருதுக்கு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் அன்னலஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி நட்சத்திர காவல் விருதுக்குரிய ரூ. 5 ஆயிரம் பணவெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
2018ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 56 வயது நாகமூர்த்தி என்பவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் நீதிமன்ற அலுவல் பணி மேற்கொண்டு, சாட்சிகளை ஆஜர்படுத்தியும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் உதவிகள் செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து இவ்வழக்கில் தீர்ப்பு கிடைக்க சிறப்பாக பணி செய்துள்ளார். மேலும் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களில் வருகிற 30.06.2022 மற்றும் 01.07.2022 ஆகிய தேதிகளில் பிறந்தநாள் கொண்டாடும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன் உடனிருந்தார்.