சென்னை நகரில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்த பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் முதல்நிலைக் காவலர் ஆகியோரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு சென்னை, வண்ணாரப் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில், இன்ஸ் பெக்டர் பிரியதர்ஷினி திறம்பட புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை மற்றும் சாட்சிகளை ஆஜர் செய்தும் வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து, 26.09.2022 அன்று கனம் நீதிமன்றம் இவ்வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 15 குற்ற வாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் என தீர்ப்பு விதித்தது. இவ் வழக்கில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி திறம்பட புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 23 குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க அயராது பணிபுரிந்துள்ளார்.
இதே போல மெரினா காவல் நிலைய முதல்நிலைக் காவலர் பாலமுருகன் மயிலாப்பூர் காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தும் கண்காணித்தும், நடப்பாண்டில் காணாமல் மற்றும் திருடு போன வழக்குகளில் சம்பந்தப்பட்ட 102 செல்போன்களை கண்டுபிடித்து, பறிமுதல் செய்து, அவை செல்போன் உரிமை யாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களில் வருகிற 12.11.2022 முதல் 17.11.2022 வரையிலான தேதிகளில் பிறந்தநாள் கொண்டாடும் 19 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை இன்று (11.11.2022) நேரில் அழைத்து வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.