Take a fresh look at your lifestyle.

புதுப்பிக்கப்பட்ட 112 சிறார் மையங்களின் முதலாம் ஆண்டு விழா: 1.000 புத்தகப்பைகள் வழங்கி கமிஷனர் பாராட்டு

boys club function commisioner shankar jiwal encourage

104

சென்னை நகரில் புதுப்பிக்கப்பட்ட 112 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் முதலாம் ஆண்டு விழாவில், சென்னை பெருகர காவல் ஆணையாளர் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுக்கு மூக்கு கண்ணாடிகள், 1000 புத்தகப் பைகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல்துறையில், கடந்த 2021ம் ஆண்டு 38 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதிதாக துவக்கப்பட்டு, மொத்தம் 112 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் (Police Boys & Girls Club) இயங்கி வருகிறது. மேற்கண்ட 112 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் சிறப்பாக செயல்படவும், சிறுமியர் மற்றும் சிறுவர்கள் கல்வி, விளையாட்டு மற்றும் தனித்திறமைகளில் சிறந்து விளங்க ஊக்குவிக்கவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மேற்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேஸ்வரியை காவல் சிறார் மன்ற சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.

அதன்படி ராஜேஸ்வரி மேற்பார்வையில் கடந்த ஒரு வருடமாக சென்னை பெருநகர காவலில் உள்ள 112 காவல் சிறார் மன்றங்களின் மீது தனிக்கவனம் செலுத்தி, தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைப்புடன் சிறார் மன்றங்களுக்கு தேவையான கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வழங்கி சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டும், கல்வி சுற்றுலாவாக மெட்ரோ ரயில், துறைமுகத்தில் உள்ள கப்பல், காவல் அருங்காட்சியகம் மற்றும் சில இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டும், சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்கள் கல்வி, விளையாட்டு மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கி போட்டிகளில் பல பதக்கங்கள் பெற்று முன்னேறி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 03.06.2022 மற்றும் 04.06.2022 ஆகிய இரண்டு நாட்கள் காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மூலம் 2 நாட்கள் கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 400 மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற மாணவ, மாணவியர்களிடையே ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் மண்டலம் வாரியாக ஓவியப்போட்டி நடத்தபட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த மொத்தம் 6 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்வாறு கடந்த 2021ம் ஆண்டு சென்னை பெருநகர காவல் சிறார் மன்றங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட 38 சிறார் மன்றங்களுடன் சேர்த்து மொத்தம் 112 சிறார் மன்றங்களும் புத்துயிர் அளித்து மேம்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றது. அதனை முன்னிட்டு இன்று (20.06.2022) சென்னை பெருநகர காவல் ஆணையரக 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமில் பரிந்துரைக்கப்பட்ட காவல் சிறார் மன்றத்தைச் சேர்ந்த 39 சிறுவர், சிறுமியர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கினார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு சைக்கிள்கள் மற்றும் காவல் சிறார் மன்றத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கு 1,000 புத்தக பைகளை வழங்கி பாராட்டினார்.

காவல் ஆணையாளர் கமிஷனர் சங்கர்ஜிவால் சென்னை பெருநகர காவல் சிறார் மன்றங்களை சிறப்பாக வழி நடத்தி, புதுப்பொலிவு அளித்து வரும் மேற்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேஸ்வரியின் சிறப்பான பணியினை பாராட்டி, காவல் சிறார் மன்றங்களை மேலும், மெருகூட்டி வழிநடத்தி செல்ல வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன், தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு மற்றும் ரோட்டரி கிளப் தலைவர் மஞ்ஜித்சிங் சானே, சங்கர நேத்திராலயா கண் மருத்துவமனை மருத்துவர்கள், சென்னை பெருநகர காவல் சிறார் மன்றங்களுக்கு உதவி செய்து வரும் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்