பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் பீலே சாதனையை, நட்சத்திர வீரர் நெய்மார் சமன் செய்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பையில் குரோஷியா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4- 2 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் பிரேசில் அணி தோல்வியை சந்தித்தாலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கால்பந்து ஜாம்பவான் பீலே சாதனையை சமன் செய்துள்ளார். பிரேசில் கால்பந்து ஜாம்பவான் 1958, 1962 மற்றும் 1970 என மூன்று முறை பிரேசில் அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்தவர் பீலே. இவர் பிரேசில் அணிக் காக 77 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது இந்த சாதனையை நட்சத்திர வீரர் நெய்மார் சமன் செய்துள்ளார். குரோஷியா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் கூடுதல் நேரத்தில் கிடைத்த வாய்ப்பில் யாரும் கணக்கிட முடியாத வகையில், 5 வீரர்களை கடந்து கோலை நெய்மார் அடித்தார். இதன் மூலம் பிரேசில் அணிக்காக தனது 77வது கோலை அடித்தார். முக்கியமான போட்டிகளில் நெய்மார் சரியாக விளையாட மாட்டார் என்ற விமர்சனங்கள் அதிகமாக இருந்து வந்தன. இந்த கோல் மூலம் அனைத்து விமர் சனங்களுக்கும் நெய்மார் பதிலடி கொடுத்துள்ளார். இருப்பினும், பிரேசில் அணியின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்துள்ளது.