Take a fresh look at your lifestyle.

பிரபல தொலைக்காட்சி நிறுவனர் வீட்டில் 50 பவுன் திருடிய பலே திருடன் கைது: 37 பவுன் நகைகள் மீட்பு

159

பிரபல தனியார் டிவி நிறுவனர் வீட்டில் 50 பவுன் நகைகளை திருடிய பலே திருடனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 37 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

 

சென்னையில் உள்ள பிரபல தனியார் டிவியின் நிறுவனர் ஐசக் லிவிங்ஸ்டன் (வயது 51). இவர் சென்னை, கொடுங்கையூர், திருவள்ளுவர் நகரில் வசிக்கிறார். கடந்த மாதம் 28ம் தேதியன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த நகைகளை எடுக்கச் சென்றார். அப்போது அதற்குள் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் காணாமல் போயிருந்தன. அது தொடர்பாக அவர் கடந்த 6ம் தேதியன்று கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தார்.

தனது வீட்டில் வேலை செய்து வரும் பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததையடுத்து கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த உமர்பாரூக் என்பவரது மகன் அசாருதீன் (வயது 31) என்பவர் ஐசக் லிவிங்ஸ்டன் வீட்டில் நகை திருடியது தெரியவந்தது. அதனையடுத்து அசாருதீனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 37 பவுன் நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.