காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று, திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம். இந்த காந்திகிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதை யொட்டி காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா கொண்டாடப்படுகிறது. அத்துடன் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36 -வது பட்டமளிப்பு விழாவும் நடைபெறுகிறது.
இவ்விரு விழாக்களும், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகின்றன. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும், தங்கப்பதக்கங்களையும் வழங்குகிறார். அவர் பட்டமளிப்பு உரையும் ஆற்றுகிறார். இந்த விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கு காந்திகிராம பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். துணைவேந்தர் குர்மித்சிங் வரவேற்று பேசுகிறார்.
இந்த விழாவுக்காக பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து 11ம் தேதியன்று மாலை 3 மணி அளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமம் அருகே அம்பாத்துரையில் அமைக்கப் பட்டுள்ள ஹெலிபேடு இறங்குதளத்துக்கு மாலை 4 மணி அளவில் வந்திறங்குகிறார். அங்கிருந்து காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி காரில் வந்து சேருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி காந்திகிராம பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வருகின்றன. மேலும் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 ஹெலிபேடுகளின் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுதவிர பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுதவிர வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.