பிரதமர் மோடி சென்னை வருகை: சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிப்பு
modi visit in chennai, 22 thousand police for bandobust duty
செஸ் ஒலிம்பியாட்டிக் போட்டியை துவங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருவதை ஒட்டி சென்னை நகரில் 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் சுமார் 22 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளை மறுநாள் 28ம் தேதியன்று சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்களில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடக்கிறது. இந்த போட்டியை துவங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகிறார். போட்டி தொடங்கிய மறுநாள் 29ம் தேதியன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னை நகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து கமிஷனர் சங்கர்ஜிவால் அனைத்து காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வருகிறார்.
பாதுகாப்புப் பணியில் 4 கூடுதல் கமிஷனர்கள், 7 இணைக்கமிஷனர்கள் மற்றும், 26 டெபுடி கமிஷனர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ , தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட சுமார் 22 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், தங்குமிடமான கிண்டி ஆளுநர் மாளிகை, சென்னை விமான நிலையம், அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளார்களா என போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனைமங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.