சென்னை, டிச. 1–
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையின் போது பாதுகாப்பில் எந்த வித குறைபாடும் இல்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார்.
சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:–
‘‘சைபர் கிரைம் மோசடிக்கு ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம். இந்த விஷயத்தில் பொதுமக்கள் எப்போதும் அதிக விழிப் புணர்வுடன் இருத்தல் முக்கியம். சைபர் கிரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக் கணக்கில் பணத்தை இழக்கின்றனர். எந்த ஒரு வங்கியும் ஓடிபி எண்ணை கேட்பது கிடையாது. எனவே ஓடிபி எண்ணை யாராவது கேட்டால் உடனே பகிர்ந்து விடக்கூடாது. இதன் மூலம்தான் குற்றங்கள் நிகழ்கிறது. எனவே ஆசைவார்த்தை கூறுபவர்களின் உண்மைத்தன்மை அறிந்து நாம் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக 46 காவல் நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்’’. என சைலேந்திரபாபு பேசினார்.
பின்பு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘‘தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடம் செல்போன் உள்ளது. இன்டர்நெட் இணைக்கப் பட்டுள்ளது. எனவே உலகத்தில் உள்ள எந்த நபரும் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம். வெளிநாட்டில் போதைப்பொருள் ஏற்றுமதி செய்தது தொடர்பாக உங்களது வங்கிக்கு பணம் வந்துள்ளது என்றோ உங்களுடைய ஆதார் எண் கொடுங்கள் என்றோ உங்கள் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்யலாம். தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அது தொடர்பாகவும் சைபர்கிரைம் ஆசாமிகள் உங்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். உங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை. எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி நாங்கள் அனுப்புகிற லிங்கில் பத்து ரூபாய் செலுத்துங்கள். உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது என்று உதவி செய்வது போல கூறுவார்கள். மின் இணைப்பை மீண்டும் பெற நாம் அவர்கள் கொடுத்த லிங்கிற்கு பத்து ரூபாய் அனுப்பினால் நமது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள்.
அதேபோல் கலெக்டர், டிஜிபி பேசுவதாக கூறியும் மோசடியில் இந்த ஆசாமிகள் ஈடு படுகின்றனர். நம்மை ஏமாற்றுபவர்கள் வெளிநாட்டில் இருக்கலாம். சைபர் குற்றங்களில் ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு புகார் கொடுக்கலாம். பிரதமர் வருகையின்போது பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. அது தொடர்பாக எஸ்பிஜி பாதுகாப்புப்பிரிவிடம் இருந்து எந்த வித புகாரும் வரவில்லை. பிரதமருக்கு நல்ல முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் எப்படி உள்ளன என்பது பற்றி நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. செயல்படாத உபகரணங்கள் இருந்தால் உடனடியாக மாற்று உபகரணங்கள் வாங்கும் பழக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. அதனை தவறாமல் செய்து வருகிறோம்.
தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தரமான உபகரணங்கள் உள்ளன. தற் போது கூட நமது காவல்துறையைச் சேர்ந்த 2 குழுவினர் மோப்ப நாய்களுடன் அந்தமான் மற்றும் கேரளாவுக்கு பாதுகாப்புப் பணிக்கு சென்று வந்துள்ளனர். அங்கிருந்து விமான த்தில் திரும்ப உள்ளனர். இப்படி வெளி மாநிலங்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நாம் வழங்கி வருகிறோம். எனவே அதில் எந்த குளறுபடிகளுமே இல்லை. பழையதை மாற்றி விட்டு புதியன வாங்குவது வழக்கமாக மேற்கொள்ளப்படுவதுதான். நம்மிடம் இருப்பது பழைய டெக்னாலஜி எல்லாம் கிடையாது. வெளி மாநிலத்தவர்களும் பாதுகாப்பு உபகரணங்களை கேட்டு வாங்குகிறார்கள். பழைய டெக்னாலஜி என்றால் அவர்கள் வாங்க மாட்டார்கள். நவீன தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் நம்மிடம் உள்ளன. 2 மடங்கு அதிகமாக அளவுக்கு அதிகமானவே பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. அதில் எதை பயன்படுத்த வேண்டும், எதனை களைய வேண்டும் என்கிற விதி உள்ளது. அதைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.
என்.ஐ.ஏ. பிரிவில் தமிழகத்தில் 15 வழக்குகள் உள்ளன. அது தொடர்பான உதவிகள், தகவல்கள் பரிமாற்றங்களை மேற்கொள்ள என்ஐஏ இயக்குநர் குழுவிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்கள் தரப்பிலும், நமது காவல்துறை தரப்பிலும் அதிகாரிகள் பங்கேற்றனர். வட மாநிலத்தவர் சராசரியான குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு சைலேந்திரபாபு தெரிவித்தார்.