Take a fresh look at your lifestyle.

பிப்ரவரி மாதத்தின் நட்சத்திர காவல் விருது பெற்ற எஸ்ஐ தியாகராஜன்: கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

92

கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையில் பணி செய்தமைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ தியாகராஜன் பிப்ரவரி மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கான (Police Star of the Month) பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கி கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ. 5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல்திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி மாதம் 2022ம் வருடத்தில் சிறப்பாகவும், மெச்சத்தக்க வகையிலும் பணியாற்றியமைக்காக மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தியாகராஜன் என்பவரை “பிப்ரவரி மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு” தேர்வு செய்தனர். இன்று கமிஷனர் சங்கர்ஜிவால் எஸ்ஐ தியாகராஜனுக்கு பிப்ரவரி மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்குரிய ரூ. 5 ஆயிரம் பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

மத்தியக் குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தியாகராஜன் வங்கி, செல்போன் சேவை நிறுவனங்கள் மற்றும் சமூகவலைதள நிறுவனங்களிலிருந்து தகவல்களை விரைந்து சேகரித்து, போலியான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து ரூ. 2.2 கோடி வீட்டு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் முக்கிய தலைமறைவு குற்றவாளியான கமலக்கண்ணன் (எ) கண்ணன் என்பவரை கைது செய்ய பெரிதும் உதவியாக இருந்துள்ளார். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட கமலக்கண்ணன் (எ) கண்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 5 மோசடி வழக்குகளும், 2 வழக்குகள் சி.பி.ஐயிலும் உள்ளது தெரியவந்தது.

மேலும் சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களில் வருகிற 13.03.2022 மற்றும் 14.03.2022 ஆகிய தேதிகளில் பிறந்தநாள் கொண்டாடும் 22 காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன் உடனிருந்தார்.