உலகின் மிகவும் வயதான பெண்ணான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 118. லூசில் ராண்டன், டோலுன் நகரில் அவர் தங்கியிருந்த இறுதி நாட்கள் சிகிச்சை மையத்தில் தூக்கத்திலேயே உயிரி ழந்ததாக செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெலா தெரிவித்தார். இது குறித்து செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெலா கூறுகையில், “லூசில் ராண்டனின் மறைவு நிச்சயமாக பெருந்துயர் தான். ஆனால் அவர் இயற்கை எய்தவே விரும்பினார். மரணத்தின் மூலம் தனது சகோதரருடன் சேர வேண்டும் என்று விரும்பினார். லூசிலுக்கு நிச்சயமாக இது விடுதலை தான்” என்றார். லூசில் ராண்டான் 1904 ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் பிறந்தார். பின்னாளில் கன்னியாஸ்திரியான அவரை அனைவரும் சிஸ்டர் ஆண்ட்ரே என்று அழைத்து வந்தனர். தன் வாழ்நாளில் லூசில் இரண்டு உலகப் போர்களை சந்தித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லூசில் மறைவுக்கு பிரான்ஸ் மக்கள் தங்கள் இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.