Take a fresh look at your lifestyle.

பல கோடி மதிப்புள்ள சேதுபதி அரச குடும்பத்து ஐம்பொன் சிலையை விற்க முயற்சி: 4 பேர் கும்பல் கைது

sethupathi raja idol seazed by madurai idol wing

77

பல கோடி மதிப்புள்ள சேதுபதி அரசு குடும்பத்து ஐம்பொன் சிலையை மதுரை சரக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு அதனை விற்க முயன்ற இருவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், படுக்கப்பத்துவை சேர்ந்த ஆறுமுகராஜ் (வயது -56) மற்றும் இடைச்சிவிளையை சேர்ந்த குமரவேல் (வயது -32) ஆகியோர் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஐம்பொன் பெண் சிலையை பதுக்கி வைத்து ரூபாய் 2 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக சிலைத்திருட்டு தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை பொறி வைத்துப்பிடித்து சிலையை மீட்க முடிவு செய்த போலீசார் ஐஜி தினகரன், எஸ்பி ரவி மேற்பார்வையில் மதுரை சரக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி மலைச்சாமி நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்ஐக்கள் கார்த்திகேயன், பாண்டியராஜன், ராஜேஷ், முலுச்சாமி, செல்வராஜ், சந்தனக்குமார் மற்றும் தலைமை காவலர் பரமசிவன் அடங்கிய தனிப்படையினர் சிலை வாங்கும் நபர்கள் போல குமரவேல், ஆறுமுகராஜ் ஆகியோரை தொடர்பு கொண்டனர்.

அப்போது அவர்கள் அந்த சிலையின் விலை ரூ. 2 கோடியே 30 லட்சம் எனவும் சிலை திருச்சி, உறையூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்த முஸ்தபா (வயது- 32) என்பவரிடம் உள்ளதாக தெரிவித்தனர். அந்த விலைக்கு சிலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்த தனிப்படை போலீசாரிடம் சிலையை விற்பதற்காக திருச்சியிலிருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலை, பழைய திருச்சி ரோடு பிரிவு சந்திப்பிற்கு தனிப்படையினர் கொண்டுவர செய்தனர். அப்போது அங்கு சிலையுடன் வந்த முஸ்தபா, ஆறுமுகராஜ், குமரவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் கொண்டு வந்த கருப்புநிற பேக்கில் சுமார் 400 ஆண்டுகள் தொன்மையான சுமார் ஒரு அடி உயரமுள்ள உலோக பெண் சிலை இருந்ததைக் கைப்பற்றினர்.

அந்த சிலை குறித்து முஸ்தபா தனிப்படையினரிடம் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்தார். சிவகங்கை, திருப்பத்தூர், கிளாமடத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் 400 வருடங்களுக்கு மேல் பழமையான சிலை என்றும் ரூ. 2 கோடிக்கு மேல் விலைக்கு போகும் என்றும் அந்த சிலையை முஸ்தபாவிடம் கொடுத்துள்ளார். சிலை விற்று அந்த பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என கூறி செல்வக்குமார் சிலையை கொடுத்ததாக முஸ்தபா தெரிவித்தார். அதனையடுத்து தனிப்படையினர் செல்வகுமாரையும் கைது செய்தனர். அந்த சிலையினை கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக செல்வகுமார் தன்னுடைய வீட்டில் வைத்திருந்துள்ளார். அவரது தகப்பனார் நாகராஜன் குறி சொல்லும் தொழில் செய்து வந்துள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன்பு குறி சொல்ல போன போது சிவகங்கையை சேர்ந்த கருவாட்டு வியாபாரி அவருடைய தோப்பிலிருந்த தென்னை மரத்தின் மேலே துணியில் கட்டி வைத்திருந்த அந்த சிலையை எடுத்து நாகராஜிடம் கொடுத்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களுக்கு நாகராஜ் இறந்து விட்டார். எனவே இச்சிலையை முஸ்தபா என்பவரிடம் விற்க சொல்லி கொடுத்ததாகவும் கூறினார்.

அதனையடுத்து ஆறுமுகராஜ், குமரவேல், செல்வகுமார், முஸ்தபா ஆகிய 4 பேரையும் மதுரை சரக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நால்வரும் கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சிலை சிவகங்கை பகுதியை ஆண்ட சேதுபதி அரச வம்சத்து பெண் சிலை எனவும் அச்சிலையின் ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் அரச வம்சத்துடையது என்பதும் தொல்லியல் நிபுணர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிலையை பறிமுதல் செய்து அதனை விற்க முயன்ற நபர்களை கைது செய்த தனிப்படையினரை டிஜிபி சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார்.