தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாமாயில், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு தமிழகத்தில் சில நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பக்கூடிய பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பேக்கிங் செய்து அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
5 நிறுவங்களும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதிக அளவு உணவுப் பொருட்கள் சப்ளை செய்து வரும் அருணாச்சலம் இம்பேக்ஸ் என்ற நிறுவனத்தின் மண்ணடி அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ், இண்டர்கிரேடட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ் உள்ளிட்ட பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 7 மொத்த விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தி.நகர் மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பாமாயில் மற்றும் பருப்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெரிய குடோன் மற்றும் உரிமையாளரின் வீடு ஆகியவை உள்ளது. தண்டையார் பேட்டை சந்தியராயன் கோவில் தெருவில் நிறுவன ஊழியர் ஒருவரின் வீடு உள்ளது. கணக்காளராக பணி புரிந்து வரும் இவரது வீட்டிலும், குடோன் மற்றும் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.