Take a fresh look at your lifestyle.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொலை வழக்கு: சதீஷ் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை

96

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து மாணவி கீழே தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொடூரன் சதீஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (வயது 20) தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சதீஷ் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதனையடுத்து சதீஷை ரயில்வே போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசில் இருந்து விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து டி.எஸ்.பி.செல்வகுமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சிறையில் இருந்த சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சிங் மூலமாக சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சதீஷை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சதீஷை சிறையில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும்படி கமிஷனர் சங்கர்ஜிவாலுக்கு சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே பரிந்துரை செய்தனர். அதனையடுத்து சதீஷை ஓராண்டு வரை பிணையில் வெளிவரமுடியாத குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.