Take a fresh look at your lifestyle.

பதவி ஏற்றதும் 3 கோப்புகளில் கையெழுத்திட்ட உதயநிதி முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு

61

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச் சராக பொறுப்பேற்றுக் கொண்டபின் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.

சேப்பாக்கம் – -திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.12.2022) இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனிற்காகவும் மூன்று முக்கிய கோப்புகளில் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டார்.

அவற்றின் விவரங்கள் பின்வருமாறு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது, “ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2022 -23 ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டத்தினைச் சேர்த்திடவும், முந்தைய காலங்களில் ஒரே ஒரு பிரிவில் மட்டுமே 10 விளையாட்டுக்களில் மாநில போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெறும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கி, 16 பிரிவுகளில் போட்டிகள் நடத்திடும் வகையிலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை ரூ.47 கோடியே 4 லட்சத்து 72 ஆயிரத்து 800 செலவில் நடத்திடவும், இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்களை அமைத்திட கோரும் கோப்பில் கையொப்பமிட்டார்.

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கபடி விளையாட்டு வீரர்களான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எச். ஜாஃபர், கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. கிறிஸ்டோபர், வலுதூக்கும் வீரர்கள் (பவர் லிப்டிங்) சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. பொன்சடையன், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். ஜெகநாதன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். குத்தாலிங்கம், பளுதூக்கும் வீரர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி. கோவிந்தராஜ், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர் ஏ.எல். கலீல்ரகுமான், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் எஸ். சிவராஜன் ஆகிய 9 விளையாட்டு வீரர்களுக்கு 1.3.2022 முதல் 1.8.2022 வரை மாதம் ரூ.3 ஆயிரம்- ஓய்வூதியம் வழங்குவதற்கும், 2.8.2022 முதல் ஆயுட்காலம் வரை மாதம் ரூ.6 ஆயிரம்- ஓய்வூதியம் வழங்குவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் பெரு நாட்டின், லிமா நகரில் 27.9.2021 முதல் 10.10.2021 வரை நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (Standard Pistol) பெண்களுக்கான தனிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதிதாவுக்கு 4 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒன்பது விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளையும், நிவேதிதாவுக்கு 4 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.