பண மதிப்பிழப்பு தோல்வியை மோடி இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பை அறிவித்ததன் 6-வது ஆண்டு நாளை தொடங்க உள்ளது. இந்தநிலையில் அந்த நடவடிக்கையை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ‘‘பணமதிப்பிழப்பு அறிவிக்கும் போது, நாட்டில் கருப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அது நாட்டின் வணிகத்தையும், வேலை வாய்ப்பையும் அழித்தது. இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், பொதுவில் கிடைக்கும் பணம் கடந்த 2016ஆம் ஆண்டை விட 72 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த அந்த மாபெரும் தோல்வியை பிரதமர் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை” என்று தெரவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி மாதமிருமுறை வெளியிடும் அறிக்கையினை வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டிருந்தது. அதன்படி, அக்டோபர் 21 தேதி வரையில் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருக்கும் பணம், ரூ.30.88 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2016, நவ 4ம் தேதி ரூ.17.7 லட்சம் கோடி புழக்கத்தில் வைத்திருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
மக்களிடம் இருக்கும் பணம் என்பது, பொதுமக்கள் வியாபாரம், பரிமாற்றம் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் பயன்படுத்த புழக்கத்தில் இருக்கும் பணத்தினை குறித்தும். இந்த பணம் வங்கிகளில் புழக்கத்தில் இருக்கும் பணத்தினை கழித்த பின்னர் கணக்கிடப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, நாட்டில், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 இனி செல்லாது என்றும், அவைகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவித்தார். நாட்டில் கருப்புப் பணம், ஊழலை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.