Take a fresh look at your lifestyle.

நேர்மையான ஆட்டோ டிரைவர், காவல்துறைக்கு உதவும் பெண்மணி ஆகியோருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

91

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் சென்னை, தரமணி பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணி மற்றும் பயணி தவறவிட்ட 9 கிராம் தங்க கைச்செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகிய இருவரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணி

சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சகர்பானு (45). இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் தரமணி பகுதியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள வேளச்சேரி தரமணி 100 அடி சாலை, கட்டபொம்மன் தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரமான காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 07.00 மணி வரை என இருவேளைகளில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வேளச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வருகிறார். இதன் பயனாக மேற்படி இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்து சீராக செல்கிறது. மேலும் பெண்மணி சகர்பானு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வாகன ஓட்டிகள் முழுவதுமாக அவருக்கு ஒத்துழைப்பு நல்கி வருவது பாராட்ட வைத்துள்ளது.

நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்:

சென்னை, ஆயிரம்விளக்கு, அஜிஸ்முல்க் 2 வது தெருவைச் சேர்ந்தவர் கென்னடி பிரஸ் (வயது 58). கடந்த 20.02.2022 அன்று இரவு சுமார் 10.15 மணியளவில் பெரம்பூர், பேரக்ஸ் ரோட்டில் உள்ள லட்சுமி திருமணம் மண்டபம் அருகே 2 பெண்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புரசைவாக்கம், சரவணா ஸ்டோர்ஸ் அருகே இறக்கிவிட்டு விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் (21.02.2022) காலை ஆட்டோ ஓட்டுநர் கென்னடி பிரஸ் ஆட்டோவை சுத்தம் செய்த போது, சுமார் 9 கிராம் எடையுள்ள 1 தங்க கைச்செயின் ஆட்டோவின் சீட்டில் கிடந்துள்ளது. அதனை அவர் பத்திரமாக எடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். போலீசார் அந்த செயினுக்கு உரிய நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ டிரைவரின் இந்த நேர்மையான செயல் அனைவரிடையே மெச்ச வைத்துள்ளது. போக்குவரத்து போலீசாருக்கு உதவி செய்து வரும் பெண்மணி சகர்பானு மற்றும் நேர்மையான ஆட்டோ டிரைவர் கென்னடி பிரஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து இன்று பாராட்டு தெரிவித்தார். அவர்களுக்கு வெகுமதி வழங்கி கவுரவித்தார்.