Take a fresh look at your lifestyle.

நெஞ்சுவலியால் துடித்த நபரின் உயிரைக் காத்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி: கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு

Commissioner shankar jiwal IPS, gave reward to E-5 p.s. Inspr. Rajeswari for Good work done

105

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட நபருக்கு முதலுதவி செய்து, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய சென்னை பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல், பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நேற்று (28.08.2022) இரவு ரோந்து பணியில் காவல் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சீனிவாசபுரம், கடற்கரை உட்புற சாலையில் (Loop road), சாலையில் கூட்டத்தை கண்டு காவல் வாகனத்தை நிறுத்தி அருகில் சென்று விசாரித்தார். அப்போது, அங்கு ஒரு நபர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு விரைந்து செயல்பட்டு அவருக்கு முதலுதவி செய்தார். மேலும், அவ்வழியே சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் அந்த நபரை ஏற்றி பின்னர் கலங்கரை விளக்கம் அருகே நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த நபரை ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர பிரிவில் சேர்த்து விவரங்கள் கூறினார்.

அதன்பேரில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இன்று (29.08.2022) காலை காவல் ஆய்வாளர் இராயப்பேட்டை மருத்தவமனை சென்று விசாரித்தபோது, அந்த நபர் தற்போது உடல்நலம் தேறி நலமாக உள்ளார் எனத் தெரியவந்தது. விசாரணையில், அவரது பெயர் முரளி (48) சீனிவாசபுரம் சினிவாசபுரம் என்பதும், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவதிப்பட்டபோது, காவல் ஆய்வாளரின் துரித செயலால் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றதால் காப்பாற்றப்பட்டதும் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு நெஞ்சுவலியால் பரிதவித்த நபரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கடந்த 24.07.2022 முதல் 31.07.2022 வரை, திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு துப்பாக்கி சுடும் போட்டி- 2022 போட்டியில் கலந்து கொண்டு பிஸ்டல் துப்பாக்கி சுடும் பிரிவில் 3 தங்கப்பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள் பெற்று சென்னை காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரி பெற்ற பதக்கங்களை பார்வையிட்டும் கமிஷர் சங்கர்ஜிவால் வாழத்துக்கள் தெரிவித்தார்.