ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த பெண் உட்பட 2 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை, நுங்கம்பாக்கம் போலீசார் இன்று (24.08.2022) அங்குள்ள சுதந்திரதின பூங்கா ரவுண்டானா அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண் உட்பட 2 நபர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தும், கஞ்சாவை ஆந்திராவிலிருந்து கடத்தி வந்து விற்க முயன்றதும் தெரியவந்தது. அதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த பாஸ்கர் (36), கோடம்பாக்கம் ஷீபா ஜோதி (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஷீபாஜோதி மீது ஏற்கனவே 1 கஞ்சா வழக்கு உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.