நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 2 மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் ‘நீட்’ உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் மையங்கள் நூற்றுக்கணக்கில் இயங்கி வருகின்றன. நாடெங்கும் இருந்து ஏராளமான மாணவர்கள் கோடா நகரில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் பீகாரை சேர்ந்த அங்குஷ் (வயது 16), உஜ்வால் (வயது 17) என்ற 2 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அங்குஷ் பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கும், உஜ்வால் ‘நீட்’ தேர்வுக்கும் தயாராகி கொண்டிருந்தனர். கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்த இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில், மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரணவ் வர்மா என்ற 17 மாணவன் தான் தங்கியிருந்த விடுதி அறையில் 2 நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில ஆண்டுகளாகவே கோடாவில் உள்ள மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சிறந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்று பயிற்சி மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு தீவிர அழுத்தம் தரப்படுவதுதான் என்று கூறப்படுகிறது. கடந்த மாத இறுதியில் கோடாவில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
2018-ம் ஆண்டில் மட்டும் கோடாவில் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2017-ம் ஆண்டு 7 பேரும், 2016-ம் ஆண்டு 17 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 2016-ம் ஆண்டு அனைத்து கோச்சிங் கிளாஸ்களையும் மூடவேண்டும் என்று சத்தம் போட்டு கத்திவிட்டு மாணவி ஒருவர் கோச்சிங் கிளாஸ் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.