போலியான ஆவணங்கள் மூலம் பொது அதிகாரம் மற்றும் விற்பனை பத்திரங்கள் பதிவு செய்து நில அபகரிப்பு செய்த 3 நபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.30 ஆயிரம் அபராதமும், மற்றொரு குற்றவாளிக்கு 6 மாதம் சிறை தண்டனை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, திருவொற்றியூர், ஐரோட்டில், கணேசன் என்பவரின் தந்தைக்கு சொந்தமான 744 சதுரடி இடம் உள்ளது. இதனை ஆள்மாறாட்டம் செய்து போலியான கையெழுத்துப்போட்டு பொது அதிகார ஆவணம் பதிவு செய்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த செல்வராஜ், வண்ணாரப்பேட்டை கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் பாண்டியராஜ் ஆகியோர் நிலத்தை கூட்டு சதி செய்து விற்பனை பத்திரம் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கடந்த 2010ம் ஆண்டு புகார் அளிக்கப் பட்டது. அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் புகார்தாரர் கணேசன் என்பவரின் சகோதரர் பழனியும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டிப்பது தெரியவந்ததின் பேரில் பழனி, த/பெ.பிரகாசம் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி வழக்கின் புலன் விசாரணை சென்னை, அல்லிக்குளம், பெருநகர குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்றத்தில் (நில அபகரிப்பு வழக்குகள்) நடை பெற்று வந்தது. மத்தியகுற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி வந்த நிலையில், மேற்படி வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (29.11.2022) தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகள் செல்வராஜ், கோவிந்தராஜ், பாண்டியராஜ் ஆகிய மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும், மற்றொரு குற்றவாளியான பழனிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட புகார்தாரர் கணேசன் என்பவரின் தந்தையின் சட்டப்படியான வாரிசுகளுக்கு, ரூ.1 கோடியே 50 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த மத்தியகுற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.