Take a fresh look at your lifestyle.

நிரந்தர வைப்பு தொகை ரூ. 1.23 கோடியை கையாடல் செய்த பஞ்சாப் சிந்து வங்கி மேலாளர், கணவர் கைது

78

சென்னை பஞ்சாப் சிந்து வங்கியில் வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்புத் தொகை ரூ. 1.23 கோடியை கையாடல் செய்த பெண் மேலாளர், அவரது கணவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியின் மண்டல மேலாளர் கன்வர்லால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘ஜார்ஜ்டவுன் மற்றும் அண்ணா சாலை கிளையின் மேனேஜராக 2016 முதல் 2019ம் ஆண்டு வரை அண்ணா நகரைச் சேர்ந்த நிர்மலா ராணி என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையை வேண்டுகோளின்றி தன்னிச்சையாக முடித்து அந்த தொகைகளை வங்கி கணக்கிலிருந்து தன்னுடைய பெயரிலான கர்நாடக வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். அந்த வகையில் அவர் ரூ. 1 கோடியே 23 லட்சம் கையாடல் செய்துள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். அந்த புகார் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி கமிஷனர் சங்கர்ஜிவால் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில் மத்தியக்குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் வங்கி மோசடி தடுப்பு பிரிவு உதவிக்கமிஷனர் முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், எஸ்ஐ பிரேம்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் வங்கியில் தொழிற்கடன் மற்றும் Letter of credit with Bank Guarantee கடன் பெறும் நிறுவனத்தினர்கள் தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் நிரந்தர வைப்பு தொகையை வைத்திருப்பர். பின்னர் தங்களுடைய Project முடிந்தவுடன் அந்த வைப்பு தொகையை திரும்ப பெற்று விடுவார்கள். அந்த வகையில் இருந்த வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகை கணக்கிலிருந்து ரூபாய் 1.23 கோடி பணத்தை நிர்மலா ராணி தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். பின்பு அதனை தனது கணவர் இளங்கோவன் பெயரில் உள்ள வங்கி கணக்கில் மாற்றம் செய்துள்ளார். பின்பு அந்த தொகையை ஏடிஎம் மூலம் எடுத்து மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. அதனையடுத்து அண்ணாநகரைச் சேர்ந்த நிர்மலாராணி (59) மற்றும் அவரது கணவர் இளங்கோவன் (62) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இருவரும் முதன்மை பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மோசடியில் ஈடுபட்டதால் நிர்மலா ராணி என்பவரை ஏற்கனவே பஞ்சாப் & சிந்த் வங்கிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் புலனாய்விற்கு உறுதுணையாக இருந்த தலைமைக் காவலர் ஸ்டாலின் ஜோஸ் மற்றும் காவல்கள் மோகன், சதீஷ் மற்றும் பெண் காவலர் கிரிஜா ஆகியோர்களை கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.