Take a fresh look at your lifestyle.

நாளை சென்னையில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

90

நாளை (21.11.2023) சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்-புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (21-ந்தேதி) வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 22ம் தேதி வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

23-ந்தேதியும், 24-ந்தேதியும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குழித்துறை 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று முதல் 22-ந்தேதி வரை ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை (21-ந்தேதி) நாளை மறுநாள்(22-ந்தேதி) மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.