நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவோம் என்று ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.
மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை மாற்றுவோம். குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தமிழகம் சிறந்து விளங்கிட அயராது உழைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொண்டர்கள் உறுதி ஏற்றார்கள். மறைந்த ஜெயலலிதாவின் 6 ம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் சிலை மற்றும் படங்கள் அலங்கரிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ஆங்காங்கே அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேடையில் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழியை படிக்க அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் அந்த உறுதிமொழியை திரும்ப சொல்லி ஏற்றுக்கொண்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி படித்த உறுதிமொழி வருமாறு: * அண்ணா தி.மு.க.வின் இதயமாய், இயக்கமாய் வாழ்ந்து, ஓய்வறியாத, ஒப்பற்ற ஓங்கு புகழ் கொண்டு, நம் இயக்கத்தை, கட்டிக் காத்து வளர்த்து, மக்களாட்சியின் மகத்துவத்தையும், மாண்பையும் எடுத்துரைத்த, புரட்சித் தலைவி அம்மாவின் வழியில், தொடர்ந்து பயணிப்போம். தடம் மாறாது, தடுமாறாது, நாம் கொண்ட கொள்கையில் லட்சியத்தோடு, வீறுநடை போடுவோம்; எதிரிகளை விரட்டியடிப்போம்; துரோகிகளை தூள் தூளாக்குவோம் என்று, வீர சபதம் ஏற்கிறோம்! வீர சபதம் ஏற்கிறோம்!
* இந்திய அரசியலில், வரலாறாய் வாழ்ந்து, எவரும் தொடமுடியாத, வானமாய்த் திகழ்ந்த, நம் சிங்கநிகர் தலைவி; தமிழக அரசியல் வரலாற்றில், நிகரில்லா வெற்றிகளைத் தந்த, தங்கத் தலைவி; தமிழ் இனத்தின் தன்மானத்தைக் காக்க, துரோகிகளையும், எதிரிகளையும், வென்றெடுத்த வெற்றி மங்கை; தாய்க்குலத்தின் துயர் துடைத்த, தங்கமனம் கொண்ட கருணை தெய்வம்; எதிரிகளின் வியூகத்தை உடைத்தெறிந்து, வீரத்தோடு திகழ்ந்த வீரமங்கை; தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம், எதிரிகளின் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்திட்ட, நம்முடைய ஊனில், உணர்வில், உதிரத்தில், நாடி நரம்புகளில் கலந்திட்ட நம் அம்மா மறைந்திட்ட இந்நாளில், தொண்டர்களின் படை, பட்டாளம் ஆர்ப்பரிக்க, கடல்போல் உடன்பிறப்புகள், கடமை தவறாத உடன்பிறப்புகள், அம்மா மறைந்திட்ட இந்நாளில், வீரசபதமேற்க குவிந்திட்ட, கொள்கை வீரர்களை, வீராங்கனைகளை, பாரீர்! பாரீர்!
தீய சக்தியை விரட்டியடிக்க, தமிழ் நாடு தலைநிமிர, கழகத்தை நிறுவினார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அத்தகைய கழகத்தை, கட்டிக் காத்து நின்ற, அம்மாவின் வழி நடக்க, உறுதி ஏற்கிறோம் ! உறுதி ஏற்கிறோம் !
* குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலரச் செய்திட, தமிழ்நாடு, தலைசிறந்த மாநிலமாய்த் திகழ்ந்திட, பார் போற்ற, தமிழகம் சிறந்து விளங்கிட, அயராது உழைப்போம், அயராது உழைப்போம் என்று, உறுதி ஏற்கிறோம், உறுதி ஏற்கிறோம்.
* நம் அம்மாவின் ஆட்சியிலும், அம்மாவின் நல்லாசியோடு, நடைபெற்ற கழக ஆட்சியிலும், அழகான தமிழ் நாடு, வளமான தமிழ்நாடு, கொலை இல்லை, கொள்ளை இல்லை, குடும்ப ஆட்சியும் இல்லை, மக்களின் மகிழ்ச்சிக்கோ, அளவே இல்லை, அளவே இல்லை.
அத்தகைய நல்லாட்சியை அமைப்பதற்கு, ஓய்வின்றி உழைப்போம், ஓய்வின்றி உழைப்போம் என்று, உறுதி ஏற்கிறோம்! உறுதி ஏற்கிறோம்!
* பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, போட்டோஷூட் ஆட்சியை நடத்தி வரும், பொம்மை முதலமைச்சர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம், முடிவு கட்டுவோம் என்று உறுதி ஏற்கிறோம்! உறுதி ஏற்கிறோம்!
* ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு ரத்தென்றார்; ஆட்சிக்கு வந்தவுடன், கல்விக் கடன் ரத்தென்றார்;
ஆட்சிக்கு வந்தவுடன், விலைவாசி குறையுமென்றார்; ஆட்சிக்கு வந்தவுடன், குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.
செய்தாரா? செய்தாரா? பொம்மை முதலமைச்சர் செய்தாரா? இதை, விடமாட்டோம்! விடமாட்டோம்! மக்களை ஏமாற்ற, விட மாட்டோம்! விடமாட்டோம்! பொம்மை முதல மைச்சரே! பொம்மை முதலமைச்சரே!
உங்கள் பொய் முகத்தைத், தோலுரித்துக் காட்டாமல், விடமாட்டோம், விடமாட்டோம் என்று உறுதி ஏற்கிறோம்! உறுதி ஏற்கிறோம்!
* அம்மாவின் ஆட்சியிலும், அம்மாவின் நல்லாசியோடு, நடைபெற்ற கழக ஆட்சியிலும், மழை வந்தது; புயல் வந்தது. அப்போதெல்லாம் மக்களுக்கு, பல்வேறு வகைகளில், துணை நின்றோம், துணை நின்றோம், ஏணியாக நின்றோம், தோணியாகப் பணியாற்றினோம்;
தற்போதைய, பொம்மை முதலமைச்சரின் ஆட்சியிலே, பத்து நாள் மழைக்கே, தலைநகர் சென்னை, பரிதவித்தது; பரிதவித்தது. தெருவெங்கும் தண்ணீர், தேங்கி நின்றது; தேங்கி நின்றது. கடலோர மாவட்டங்கள் எங்கும், பெரும் சேதம்; பெரும் சேதம். மக்கள் விழிகளிலே கண்ணீர், கண்ணீர்! வீட்டுக்குள்ளே தண்ணீர், தண்ணீர்! தீயசக்தியின் ஆட்சியிலே, தண்ணீரும் வடியவில்லை; மக்களின் வாழ்வும், விடியவில்லை, விடியவில்லை. இந்த மக்கள் விரோத ஆட்சியை, மாற்றுவோம், மாற்றுவோம் என்று, உறுதி ஏற்கிறோம்! உறுதி ஏற்கிறோம்!
* அம்மாவின் ஆட்சியிலே, சிறப்பான திட்டங்கள் பல உண்டு. ஏழைகள் பசியாற, அம்மா உணவகங்கள்; எளியவர்கள் நலம் பெற, அம்மா மருந்தகங்கள்; கிராமப்புற மாணவர்கள் வளம் பெற, மடிக் கணினி; தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம்; இத்தகைய அற்புதமான திட்டங்களை முடக்கிப் போட்ட, தீயசக்தி ஆட்சியே, அம்மாவின் புகழை, மறைக்காதே, மறைக்காதே; மக்கள் நலத் திட்டங்களை, நிறுத்தாதே, நிறுத்தாதே; திமுக ஆட்சியின் கொட்டத்தை, அடக்குவோம், அடக்குவோம் என்று,
உறுதி ஏற்கிறோம்! உறுதி ஏற்கிறோம்!
* வழக்கு மேல் வழக்குகள், அத்தனையும் பொய் வழக்குகள், பொய் வழக்குகளைப் போட்டு, கழகத்தை, முடக்கிவிட முடியுமா? முடக்கிவிட முடியுமா? கழகத்தை, அழித்துவிட முடியுமா? அழித்துவிட முடியுமா? எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம்; சதிவலைகளை அறுத்தெறிவோம்; பொய் வழக்குகளை முறித்தெறிவோம். குடும்ப ஆட்சியின், கொள்ளைக் கூட்டத்தை, வீட்டுக்கு அனுப்புவோம்; வீட்டுக்கு அனுப்புவோம் என்று, சபதம் ஏற்கிறோம்! சபதம் ஏற்கிறோம்!
* அண்ணா தி.மு.க. என்பது, ஆயிரங்காலத்துப் பயிர்; ஆயிரங்காலத்துப் பயிர். தமிழ்நாட்டு மக்களுக்குத், தொண்டாற்றி, தொண்டாற்றி, தழைத்து நிற்கும் ஆலமரம். இதை அசைத்துப் பார்க்க முடியுமா? உடைத்துப் பார்க்க முடியுமா? கட்டிக் காப்போம்; கட்டிக் காப்போம், கழகத்தைக் கட்டிக் காப்போம்.
* இந்திய சரித்திர வானில், நாடாளுமன்றத்தின், மூன்றாவது பெரிய கட்சியாக, கழகத்தை மாற்றியவர், நம் புரட்சித் தலைவி அம்மா. வருகிறது வருகிறது, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது.
இத்தேர்தலில், வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட, சூளுரைப்போம்! சூளுரைப்போம்! நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்று, வீர சபதமேற்கிறோம்! வீர சபதமேற்கிறோம்! * இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வெற்றி முழக்கம்! வெற்றி முழக்கம் என்றே, திக்கெட்டும் வெற்றியைப் படைத்திடுவோம்; திசையெட்டும் வெற்றிக் கொடியை நாட்டிடுவோம்!
அதற்காக, அயராது உழைத்திடுவோம்! அயராது உழைத்திடுவோம்! கழகத்தின் வெற்றிக்காக, எத்தகைய தியாகத்தையும், செய்திடுவோம்! செய்திடுவோம் என்று உறுதி ஏற்கிறோம்! உறுதி ஏற்கிறோம்! * தமிழ்நாடு தழைக்க, தமிழ்நாடு தழைக்க, உழைத்திடுவோம்! உழைத்திடுவோம்! புரட்சித் தலைவரின் பெரும் புகழையும், புரட்சித் தலைவியின் பெரும் புகழையும், எந்நாளும் போற்றிடுவோம்; போற்றிடுவோம்! களங்க ள் அனைத்திலும், வென்றிடுவோம்! வென்றிடுவோம்;
கழகத்தை இமயமாய் உயர்த்திடுவோம்! உயர்த்திடுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்! வாழ்க, அண்ணாவின் புகழ். வளர்க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெரும் புகழ். ஓங்குக, நம் புரட்சித் தலைவி அம்மாவின் நெடும் புகழ். வெல்க! வெல்க!! வெல்கவே!! அண்ணா தி.மு.க. என்றும் வெல்க, வெல்க, வெல்கவே!
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி உறுதிமொழியை படித்தார்.