நாயகத்தின் வீட்டில் நெருப்பில்லாமல் கமகம சமையல் நடந்தேறிய அதிசயம்!
நாகூர் நாயகம் சுல்தான் ஷாகுல் ஹமீது கன்ஜஸவாய் பாதுஷா (ரழி) நான்கு வயது பாலகராக இருந்த போது அவர்களை பெற்றோர்கள் மார்க்கக் கல்வி பயில வைத்தார்கள். தினமும் மதரஸா என்னும் கல்விச் சாலைக்குப் போய் குர்ஆன் கல்வி பயின்று கொண்டு வந்தார்கள். அதிகாலையில் எழுந்து சிற்றுண்டி உண்டு கல்விச்சாலைக்கு செல்வார்கள். மதியம் வரை ஓதிக்கொண்டிருந்து, பின் உணவுக்காக வீட்டுக்கு வந்து ஆகாரம் புசித்து, மீண்டும் மதரசாவுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். பின்னர் மாலையில் வீட்டுக்கு வருவார்கள். இடையில் ஒவ்வொரு வேளையிலும் தவறாமல் தொழுவார்கள். இரவு காலங்களைக் கல்விப்பயிற்சியிலும், வணக்கம் பழக்கத்திலுமே போக்குவார்கள். மார்க்கச் சட்டத்தின் பாரத்தைச் சுமந்து கொள்ளும் பருவத்தை அடையும் முன்னமே ஆண்டவர் அவர்கள் அந்தச்சட்ட நிபந்தனைப்படி நடக்க நன்றாய்ப் பழகி, விதி விலக்குகளில் தவறாமல் ஒழுகி நடந்து வந்தார்கள்.
இவ்வித நல்லொழுக்கத்துடன் நாகூர் நாயகம் அவர்கள் கல்வி கற்றுவரும் காலத்தில் ஒரு நாள் அதிகாலையில் எழுந்து வழக்கம் போல கல்விச்சாலைக்குப் போய்விட்டார்கள். அன்று முற்பகல் நாயகத்தின் தாயாராகிய பாத்திமா அல்லாஹ்வைத் தொழுவதில் அதிக நேரமாக இருந்து விட்டார்கள். ஆண்டவர் அவர்கள் மதியான உணவுக்காக வீட்டுக்கு வரும் வேளை வந்து விட்டது. அல்லாஹ்வை வணங்குவதில் லயித்துப் போன பாத்திமா மதியம் நேரம் வந்து விட்டதை உணர்ந்து, மைந்தர் பசித்து வருவாரே என்று பதறி எழுந்தார். நெருப்பு எடுத்து வரும்படி பக்கத்து வீட்டுக்கு அனுப்பி விட்டு, அதிக விரைவாய் அரிசி களைந்து அடுப்பில் ஏற்றினார்கள். சமைக்க வேண்டிய கறி வகைப் பதார்த்தங்களை எல்லாம் ஆய்ந்து கழுவிப் பாத்திரங்களில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் ஹஜ்ரத் ஆண்டவர் அவர்கள் கல்விச் சாலையிலிருந்து வீட்டுக்கு வந்தார்கள்.
உணவு அருந்தி பசி தீர்க்க வந்த ஆண்டவர் அவர்கள் வீட்டுக்கு நுழைந்தபோதே தாயாரைக் கூப்பிட்டு “அம்மா! பசிக்கின்றது; ஆகாரம் கொடுங்கள்” என்று கேட்டார்கள். மைந்தர் இப்படிக்கேட் போது தாயார் “என் கண்மணியான மகனே! சற்றே பொறுங்கள். ஆக்க வேண்டிய எல்லாம் தயாராய் இருக்கின்றன. நெருப்பு மாத்திரம் இல்லை. அதற்காக அண்டை வீட்டுக்கு ஆள் அனுப்பி இருக்கிறேன். சிறிது நேரத்தில் வந்து விடும். ஒரு கணத்தில் சமைத்துத் தருகிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்று அன்புடன் சொன்னார்கள்.
இச்சொல்லைக் கேட்ட ஆண்டவர் அவர்கள் தாயாரை நோக்கி “தாயாரே! இனி நெருப்பு வந்து அதனை சமைத்து சாப்பிட அதிக நேரம் ஆகி விடும். அல்லாஹுத்தஆலா என் பசியை அறிந்து உணவு கொடுக்கும் கிருபாகரன். ஆகையால், தாங்கள் சமைப்பதற்காகத் தயார் செய்த எல்லாவற்றையும் திறந்து பாருங்கள்; அவை முழுவதும் சமைக்கப்பட்டு இருக்கும்” என்று சொன்னார்கள். இச்சொல்லைக் கேட்ட, அருமைத்தாயார் பாத்திமா அதை நம்பி உடனே எழுந்துபோய், அடுப்பில் களைந்து வைத்த அரிசியைத் திறந்து பார்த்தார்கள். பானை நிறைய சோறு சமைத்துப் புழுங்கி, ஆவி எழுந்து கொண்டு இருந்தது. கறிப் பாத்திரங்களையும் ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தார்கள். அந்தப் பாத்திரங்களில் உள்ள கறிகளும் பாகம் செய்யப்பட்டுச் சுடச்சுட இருந்தன. அவற்றின் நறுமணங்களும் கமகம என்று வீசின. இந்த அதிசயத்தைக் கண்ட தாயார் மணம் மகிழ்ந்து, உடனே சாப்பாட்டு தட்டுகளைக் கழுவி மைந்தராகிய நாகூர் நாயகத்துக்கு பரிமாறினார்கள். அடுப்பில் வைத்துத் தீயால் சமைக்கப்படாமல் அல்லாஹ்வின் அருளால் சமைக்கப்பட்ட அந்த அருமையான உணவுகளை பாதுஷா நாயகம் சந்தோஷத்துடன் உண்டு மகிழ்ந்தார்கள்.