நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு
Commissoner shankar jiwal gave reward to Good Work done chenai Modern Control Room Police officers, Police persons
பொதுமக்கள் அவசர காவல் உதவி தொலைபேசி எண் 100ல் அளிக்கும் புகார்கள் மீது குறைந்த நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு காவல் ரோந்து வாகனங்கள் சென்று நடவடிக்கை எடுக்க உதவிடும் நவீன காவல் கட்டுப்பாட்டறை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை, சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, எழும்பூர், பழைய காவல் ஆணையரகத்தில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டறையில் (State Police Control room) அவசர காவல் உதவி தொலைபேசி எண் 100 மையம் 24 மணி நேரம் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் உடனடி தேவைக்காக அவசர காவல் உதவி தொலைபேசி எண்.100ஐ தொடர்பு கொள்ளும்போது, மாநில கட்டுப்பாட்டு அறையில் தகவல்களை பெற்று, சம்பந்தப்பட்ட நகரம் அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவத்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு வரும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய 4 மண்டலங்களின் கட்டுப்பாட்டறைகள் மற்றும் போக்குவரத்து காவல் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களின் கட்டுப்பாட்டறைகள் ஆகிய 6 கட்டுப்பாட்டு அறைகள் நவீன மயமாக்கப்பட்டு, பொதுமக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில், பொதுமக்கள் அவசர காவல் உதவி தொலைபேசி எண்.100ல் அளிக்கும் புகார்கள் மீது, சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட காவல் ரோந்து வாகனங்கள் சில நிமிடங்களுக்குள் (Response time 100 Calls) விரைந்து சென்று துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பெரும்பான்மையான சம்பவங்களில் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு (சட்டம் & ஒழுங்கு) மற்றும் போக்குவரத்து வடக்கு, தெற்கு கட்டுப்பாட்டறைகளின் ஆய்வாளர்கள் ஆனந்தன், அன்பழகன், 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 37 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 44 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை, சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஜெ. லோகநாதன் (தலைமையிடம்), மகேஸ்வரி (மத்திய குற்றப்பிரிவு), நவீன கட்டுப்பாட்டறை துணைக்கமிஷனர் ஆரோக்கியம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.