Take a fresh look at your lifestyle.

நள்ளிரவு 1 மணிக்கு மேல் கேளிக்கைகள் கூடாது: சென்னை நகர காவல்துறை எச்சரிக்கை

72

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், புத்தாண்டு கொண்டாட்ட த்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல், கிளப், பார் உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, கட்டுப் பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இன்று (29.12.2022) வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில், நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள், கிளப், பார் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்கா, தலை மையில், துணை ஆணையாளர்கள் திஷா மிட்டல், கோபி ஆகியோர் தலைமையில் நட்சத்திர ஓட்டல், கிளப், பார், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 31.12.2022 அன்று இரவு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் கிளப், உணவு விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் கீழ்கண்ட வழி முறைகளை கடைபிடிக்குமாறு சென்னை பெருநகரக் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நட்சத்திர ஓட்டல் மற்றும் கேளிக்கை விடுதிகள்

* பொழுது போக்கு இடங்களில், புத்தாண்டு தினத்தைக் கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப்போருக்கு, 31.12.2022 அன்று மாலை 06.00 மணி முதல் நள்ளிரவு 01.00 மணிவரை, கொண்டாட்டங்களுக்கான சிறப்பு உரிமம் வழங்கப்படும். நள்ளிரவு 01.00 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்தி கொள்வதுடன் கொண்டாட்டங்களை கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும்.
* நட்சத்திர ஓட்டல்கள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்கள் மற்றும் தேவைப்படும் இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் நபர்கள் மற்றும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
* அரங்கத்திற்குள் 80% க்கு மேல் நபர்களை அனுமதிக்கக்கூடாது.
* அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மது வகைகளை பரிமாறக் கூடாது.
* நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது.
* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்யும் வண்ணம் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
* நீச்சல் குளங்களை 31.12.2022 அன்று மாலை 6 மணி முதல் 01.01.2023 அன்று காலை 6 மணிவரை மூடி வைத்திருக்க வேண்டும்.
* கஞ்சா, போதை மருந்து, உள்ளிட்ட போதை பொருட்கள் விநியோகம் செய்வதையோ, உட்கொள்வதையோ தடுத்து அதன் நடமாட்டமோ இல்லாமல் ஓட்டல் நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும். இது குறித்து காவல்துறைக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.
* கலாச்சார நடனங்கள் தவிர ஆபாச நடனம் மற்றும் அருவறுக்கத்தக்க கேளிக்கை நடனங்கள் நடைபெறாமல் கண்காணித்து தடை செய்ய வேண்டும்.
* விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்களின், விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட விபரங்களை சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் சரிபார்க்கவேண்டும்.
* பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் வெடிக்க அனுமதி கிடையாது.
* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகள் மற்றும் அறையில் (Ball Rooms) பெண்கள் மற்றும் சிறுமிகளை கேலி செய்தல் (Eve teasing), அத்துமீறல்கள் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓட்டல் நிர்வாகத்தினர் போதிய பணியாளர்களை நியமித்து கண்காணித்து தடுக்க வேண்டும். எல்லை மீறும் சமயத்தில், தங்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு அல்லது காவல் கட்டுப்பாட்டறைக்கு உடனடியாக தகவல் கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.
* நீச்சல் குளத்திற்கு செல்லும் வழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
* ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலான விருந்தினர்களை நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கக்கூடாது.
* மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்தி வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க, ஓட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* குடிபோதையில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை விடுதி நிர்வாகம் நியமித்துள்ள பணியாளர்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.
* நிர்வாகத்தினர், கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியத்துடனும் நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* காவல்துறை அனுமதித்த இடம், நேரம் தவிர்த்தல் மற்றும் விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஒட்டல், கிளப், பார் மற்றும் கேளிக்கை விடுதிகள் நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதன் உரிமங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
*மேலும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சென்னை பெருநகரக் காவல் துறை அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.