நள்ளிரவில் நடுரோட்டில் தவித்த 2 வயது ஆண் குழந்தை * பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ஆவடி காவல் ஆணையரகம்
சென்னை பூந்தமல்லியில் நடுரோட்டில் நள்ளிரவில் தனியாக தவித்த 2 வயது ஆண் குழந்தையை ஆவடி காவல் ஆணையரக போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்வை ஏற்பத்தியுள்ளது.
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை டாக்டர் நந்தகுமார், கடந்த 3ம் தேதியன்று நள்ளிரவு 12 மணியளவில் போரூர் அய்யப்பந்தாங்கலில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து வேலூருக்கு டியூட்டிக்கு தனது காரில் புறப்பட்டார். பூந்தமல்லி பைபாஸ் சாலை சவீதா மருத்துவமனைக்கு அருகில் வந்த போது சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை அங்குமிங்குமாக ஓடியபடி இருந்தது. அதனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த நந்தகுமார் காரை நிறுத்தி அந்தக் குழந்தையை பத்திரமாக மீட்டார். குழந்தையின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ யாரும் அங்கு இல்லாததால் பூந்தமல்லிகாவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த தலைமைக் காவலர் மணிகண்டனிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.
அது தொடர்பாக இரவு ரோந்தில் இருந்த நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வியும் பூந்தமல்லி காவல் நிலையம் விரைந்தார். இந்நிலையில் நள்ளிரவு 12.50 மணியளவில் ஆவடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரேடியன் ராயல் அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் கணேசன் என்பவர் தொடர்பு கொண்டு அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்திலிருந்து 2 வயது ஆண் குழந்தை காணாமல் போனதாக தெரிவித்தார். விசாரணையில் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட 2 வயது குழந்தைதான் அது என்பது தெரியவந்தது. தகவல் உடனடியாக குழந்தையின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மகிழ்ச்சியடைந்த குழந்தையின் தாய் ஆயிசாபானு, தந்தை ஆதிக் பாட்சா ஆகியோர் காவல் நிலையம் விரைந்து வந்து குழந்தையைப் பெற்றனர். குழந்தையின் பெற்றோர் தங்களது குழந்தையை பத்திரமாக மீட்ட மருத்துவர் நந்தகுமாருக்கும், பூந்தமல்லி போலீசாருக்கும் நன்றி தெரிவித்தனர்.
நடுரோட்டில் தனியாக தவித்த குழந்தையை மீட்டு, பொறுப்புடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த டாக்டர் நந்தகுமாரை கமிஷனர் ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் பூந்தமல்லி காவல் நிலைய தலைமைக்காவலர் மணிகண்டன், நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் அன்புச் செல்வி மற்றும் ஆவடி காவல் கட்டுப்பாட்டறை காவலர்களையும் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.