‘‘அண்ணல் நபி அவர்கள் தான் உண்ணும் உணவு எவற்றிலும் எந்த குறையும் கூறாது இறைவன் திருப்பெயரை மொழிந்து உடனிருப்பவர்களுடன் பகிர்ந்து உண்பார்கள்’’ என்று உணவில் குறை கூறாத நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த குணத்தை பற்றி அபூஹுரைரா (ரழி) உரைக்கிறார்கள். (நுால் ஆதாரம் புகாரி, முஸ்லிம், அபூதாவுத், திர்மதி)
* ‘‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் திருப்பெயரைப் பொருத்தமாய் கூறி உணவு உண்ண துவங்குவார்கள்’’ – அறிவிப்பவர்கள் ஹுதைபா (ரழி), ஆயிஷா (ரழி) (நுால்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி).
* ‘‘நான் சாய்ந்து கொண்டு உண்பவன் அல்லன்” என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை அபூஜுஹைபா அருளினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனக்கென சிறிய தட்டில் உணவு உண்டதில்லை. அதுபோல தனக்கென தனி சுப்ரா (உணவு உண்ண விரிக்கப்படும் விரிப்பு)விலும் உணவு உண்டதில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனித்து உண்டதில்லை; எவ்வுணவையும் பெரிய தட்டில் பலரோடு பகிர்ந்துண்டார்கள். (நுால்: முஸ்லிம், அபூதாவுத், திர்மிதி)
*ஆண்மை சக்தி அதிகரிக்க: ஒரு முறை ஒரு ஸஹாபி ‘‘யா ரசூலுல்லாஹ்! என் பலவீனம் பற்றி அல்லாஹ்விடம் முறையிடுகின்றேன்” என்றார்கள். அப்போது நபிகள் நாயகம் அன்னவர்கள் ‘‘முட்டையை உண்ணுங்கள்” என்றார்கள். (ஆதாரம்: நூல்- பைஹகி). பழைய முட்டையை விட புதிய முட்டை சிறந்தது. மற்ற முட்டைகளை விட கோழி முட்டை சிறந்தது. (திப்புன் நபவி)
* அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் அன்னவர்கள் கூறினார்கள்: ‘‘உங்கள் சுவையூட்டிகளில் மிகச் சிறந்தது உப்பு ஆகும்” (நூல்:- இப்னுமாஜா, பாகம்1: அத்தியாயம் 29: எண் 3315)