சென்னை அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட ஹிஸ்டரி ஷீட் ரவுடியை 319 நாட்கள் சிறையிலடைத்து துணைக்கமிஷனர் சிவப்பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, கொளத்தூர், திருவீதியம்மன் கோயில் தெவைச்சேர்ந்த ஜெகதீசன் என்பவரது மகன் கார்த்திக் (எ) மோளம் கார்த்திக் (வயது 20). பிரபல ரவுடியான இவர் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் ஹிஸ்டரி ஷீட்டில் பெயர் உள்ளது. 3 அடிதடி வழக்குகள், 2 போக்சோ வழக்குகள் உள்ளது. இந்நிலையில், மோளம் கார்த்திக் கடந்த 14.02.2022 அன்று அண்ணாநகர் துணை ஆணையாளர் சிவப்பிரசாத் முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால், கார்த்திக் 26.02.2022 அன்று கிருஷ்ணகாந்த் என்பவரை தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவரை பெரவள்ளூர் போலீசார் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். கார்த்திக் ஓராண்டு காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறியதால், செயல்முறை நடுவராகிய அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவபிரசாத் கார்த்திக்குக்கு 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து, மீதமுள்ள 319 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து இன்று (31.03.2022) உத்தரவிட்டார். அதன் பேரில், எதிரி கார்த்திக் (எ) மோளம் கார்த்திக் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.