Take a fresh look at your lifestyle.

நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 332 நாள் சிறை: அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவப்பிரசாத் உத்தரவு

335

சென்னை அண்ணாநகரில் நன்னடத்தை விதிமுறையை மீறிய ரவுடியை 332 நாட்கள் சிறையில் அடைத்து அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவப்பிரசாத் உத்தரவிட்டார்.

சென்னை, அமைந்தகரை, கண்ணையா தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (எ) பட்டாபி (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது வழிப்பறி உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் 9ம் தேதியன்று அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவப்பிரசாத் முன்பு ரவுடி பார்த்திபன் சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும்,  நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், பார்த்திபன் கடந்த 4.05.2022 அன்று அதிகாலை, கண்ணையா தெருவில் தனியாக வசிக்கும் காந்தம்மாள் என்ற 70 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை தாக்கி 4 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இது தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து பார்த்திபன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இதனைத் தொடர்ந்து பார்த்திபன் ஓராண்டு காலம் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை விதிமுறையை மீறியதால் அண்ணாநகர் துணைக்கமிஷனரும் செயல்முறை நடுவருமான சிவப்பிரசாத் பார்த்திபன் மீது கடும் நடவடிக்கை எடுத்து நடவடிக்கை மேற்கொண்டார். பார்த்திபன் மீது கு.வி.மு.ச. பிரிவு 110 கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 332 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து சிவப்பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் பார்த்திபன் சிறையில் அடைக்கப்பட்டார்.