சென்னை புளியந்தோப்பு பகுதியில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு ரவுடியை 316 நாட்கள் சிறையில் அடைத்து துணைக்கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டார்.
சென்னை, வியாசர்பாடி, எஸ்.எம் நகர், 51வது பிளாக்கைச் சேர்ந்தவர் பிரசாந்த் (எ) குள்ள பிரசாந்த் (29). இவர் சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 15 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், பிரசாந்த் கடந்த 7.02.2022 அன்று புளியந்தோப்பு துணை ஆணையாளர் ஈஸ்வரன் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்த வொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், பிரசாந்த் கடந்த 20.3.2022 அன்று எம்கேபி நகரில், சார்லஸ் என்பவரை வழிமறித்து கையால் தாக்கி அவரது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியுள்ளார். அது தொடர்பாக எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குள்ள பிரசாந்த் 1 வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறியதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டார். குள்ள பிரசாந்த்துக்கு குற்றவியல் சட்டப்பிரிவு 110 கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து, மீதமுள்ள 316 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து நேற்று துணைக்கமிஷனர் ஈஸ்வன் (30.03.2022) உத்தரவிட்டார். அதன் பேரில், எதிரி பிரசாந்த் (எ) குள்ள பிரசாந்த் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.