Take a fresh look at your lifestyle.

நதிகள் இணைப்பு சிறப்புக்குழு கூட்டம்: டில்லியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

66

டில்லியில் நேற்று நடைபெற்ற நதிகள் இணைப்புக்கான சிறப்புக்குழு கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.

தேசிய நீர் மேம்பாட்டு முகமை சங்கத்தின் 36-வது ஆண்டு பொதுக்கூட்டமும், நதிகள் இணைப்புக்கான சிறப்புக்குழுவின் 20-வது கூட்டமும் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர். “இந்திய அரசின் மிக முக்கியமான துறைகளில் நீர்வளத்துறையும் ஒன்று. நதிகளை இணைக்கும் திட்டம், நாட்டின் நீர் மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அவசியமானது ஆகும். இது வறட்சி மற்றும் மானாவாரி விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதிலும் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் பகுதியை ஒட்டிய ‘கென் பெட்வா’ இணைப்பு திட்டம் பற்றியும் பேசினார். இந்த திட்டம் பந்தேல்கண்ட் பகுதிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் எனவும், 8 ஆண்டுகளில் இதை முடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கூட்டத்தில் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் மற்றும் காவிரி, குண்டாறு, கோதாவரி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நதிகள் இணைப்பு ஆணையத்தின் அரசியலமைப்பு பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஜல்சக்தி துறையின் இணை மந்திரி பிஷ்வேஸ்வர் துடு, கர்நாடக நீர்வளத்துறை மந்திரி கோவிந்த் எம்.கார்ஜோல், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்தியபிரதேச நீர்வளத்துறை அமைச்சர் துளசிராம் சிலாவத், தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.