கருணைக்கடல் நாகூர் நாயகம் ஹஜ்ரத் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள், தன்னுடன் வந்த முஈனுத்தீனுடன் குவாலியரை நோக்கி நடந்து நடைபயணமாக பல ஊர்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து அதன் வழியாக தனது பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த காட்டு வழியாக ஒரு கொள்ளைக்கூட்டம் நாயகத்தை வழி மறித்தனர். ‘‘உங்கள் வசம் உள்ள அனைத்துப் பொருட்களையும் எங்களிடம் கொடுத்து விட்டுப் பேசாமல் நடையைக் கட்டுங்கள்’’ என கொக்கரித்தபடி கூறினர். ‘‘தர மறுத்தால் எங்கள் கைகளில் உள்ள இந்த வாள்களுக்கு வீணாக இரையாவீர்கள்’’ என்று சொல்லி வாளை வெளியே உருவினார்கள்.
இதனைக் கண்ட சாகுல் ஹமீது பாதுஷா நாயகம், “நாங்கள் உடுத்தி இருக்கும் இந்த உடைகளைத் தவிர, வேறு ஒன்றும் எங்கள் வசம் இல்லை. அப்படி நாங்கள் நாளைக்கு என்று எதையும் சேமித்து வைத்துக்கொள்வதும் இல்லை” என்று அந்த திருடர்களை நோக்கிச் சொன்னார்கள். அதனைக் கேட்ட அந்த கயவர்கள், “அப்படியா? அப்படியானால் உடைகளைக் களைந்து கீழே வைத்து விடுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு மறுத்த ஆண்டவர் அவர்கள், “உடையைக் களைந்தால் மர்ம ஸ்தானம் வெளிப்படும். பிறர் காணும்படி, மர்மஸ்தானத்தை வெளிப்படுத்துவது ஹராமாய் இருக்கும். அவ்விதமான காரியத்தை நாங்கள் செய்யமாட்டோம்” என்று அமைதியாக பதிலளித்தார்கள்.
நாயகத்தின் சொல்லைக்கேட்ட திருடர்கள் சினம் கொண்டு, தங்களது கைகளில் இருந்த கூர்மையான பள பளப்பான வாள்களால் பாதுஷா நாயகம் அவர்களை வெட்டினார்கள். அந்த வெட்டுகள் நாயகத்தின் உடல் மீது பட்ட போது ஆகாயத்தில் ஊடுருவது போல ஆயின. திருடர்கள் வெட்டின ஒவ்வொரு வெட்டும் அவர்களையே திரும்ப வெட்டியது. எந்தெந்த உறுப்பை வெட்டினார்களோ, அந்த வெட்டு ஒவ்வொன்றும் கொள்ளையர்கள் மீதே திரும்ப விழுந்தது. அவர்கள் தரையில் முகம் கவிழ விழுந்தார்கள்.
இந்த காட்சிகளை அருகில் உள்ள புதரில் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த மற்ற கொள்ளையர்களுக்கு, நாயகம் அவர்கள் திருடர்களை வெட்டி வீழ்த்துவது போல தோன்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களும் சினம் கொண்டு கூட்டமாய் அங்கிருந்து ஓடி வந்து பாதுஷா நாயகத்தை நோக்கி ஓடி வந்து பாய்ந்து வந்து சரமாரியாக வெட்டினார்கள். அதில் ஒரு வெட்டுக்கூட எஜமான் நாயகம் மீது படாமல், வெட்டிய கொள்ளையர்கள் மீதே திருப்பித்தாக்கியது. கொள்ளைக்கூட்டத்தினர் கைகளும், கால்களும் வெட்டுப்பட்டு, ரத்தவெள்ளத்தில், தரையில் குத்துயிரும், குலை உயிருமாக கிடந்து துடித்தனர். வந்தவர்களில் ஒருவர் கூட மீளவில்லை.
ரத்தப்படுகாயங்களுடன் அங்கே கொள்ளையர்களின் அழுகுரல் அந்த காடு முழுவதையும் பதற வைத்தது. அந்த சப்தம் காட்டுப் பகுதியில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த கொள்ளை கூட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினரின் காதை கிழித்தது. அவர்கள் பதறியடித்தபடி ஓடிவந்து தங்கள் இனத்தவர் குற்றுயிராய், குலையுயிராய் கிடப்பதைக் கண்டு என்ன ஏது என்று விசாரித்தனர். பின்னர் நடந்ததை உணர்ந்து கொண்ட அவர்கள் நாகூர் நாயகத்தின் கால்களில் சாஷ்டங்கமாய் விழுந்தனர். தங்கள் இனத்தவர் செய்த பிழையை பொறுக்கும்படி மன்றாடினார்கள். இனி இது போன்ற கொள்ளைத் தொழிலில் ஈடுபடமாட்டோம் என கெஞ்சினார்கள்.
அவர்கள் நாகூர் எஜமானை நோக்கி, ‘‘எஜமானே, தங்கள் மகத்துவத்தை இன்னது என்று அறியாமல் மதி கேட்டினால் வெட்டுப்பட்டு கிடக்கும் இவர்களை தாங்கள் மனம் இரங்கி சுகப்படுத்தி அருளவேண்டும்’’ என்று இரந்து கெஞ்சினார்கள். துன்பம் செய்தாருக்கும், இன்பமே செய்யும் கருணைக்கடல் நாகூர் நாயகம் அவர்கள், அங்கு வெட்டுண்டு கிடந்த உடல் உறுப்புக்களை அவரவர் உடலில் பொருத்தி தமது திருவாயில் இருந்து நீரை உமிழ்ந்து, ‘‘இவர்களுக்கு அருள் செய்வாயாக’’ என்று இறைவனிடம் துஆ செய்தார்கள். அடுத்த கணமே வெட்டுப்பட்டு கிடந்த அனைத்து கொள்ளையர்களும் நல்லபடியாக எழுந்தார்கள். அவர்கள் உடலில் வெட்டுப்பட்ட தடங்கள் கூட எதுவும் இல்லை. அனைவரும் நாகூர் நாயகத்தை வழிபட்டு நின்றார்கள்.
‘‘நீங்கள் வழி கேடான மார்க்கத்தை விட்டு தீனுல் இஸ்லாம் என்னும் இஸ்லாம் மார்க்கத்துக்கு வாருங்கள். இறைவனைப் பற்றிப்பிடியுங்கள். உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்ல பலன் கிடைக்கும்’’ என அறிவுரைகளை அவர்களுக்கு நாகூர் நாயகம் போதித்தார்கள்.
இந்த போதனை திருடர்களின் மனதில் அஞ்ஞானத்தைப் போக்கி மெஞ்ஞானச்சுடரை எழுப்பி அவர்களின் உள்ளத்தில் ஓரிறைக் கொள்கையை வேறுான்றிப் பதித்தது. உடனே அவர்கள் ஆண், பெண் என அனைவரும் நாகூர் நாயகத்தின் கரம் பற்றி ‘‘லாஇலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர்ரசூலுல்லாஹ்’’ கலிமா சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்கள். பின்னர் அந்தத் திருடர்கள் நாகூர் நாயகம் தங்கியிருந்த இடத்தில் 40 நாட்கள் இருந்து ஞானபோதனைகளை பெற்றார்கள். அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்த பின்னர் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் முஈனுத்தீனுடன் குவாலியர் நோக்கி நடந்தார்கள். நாயகத்தின் துஆ பரக்கத்தினால் நேர்வழி பெற்ற திருடர்கள் சாலிஹான அல்லாஹ்வின் நல்லடியார்கள் ஆகி விட்டார்கள்.
கன்ஜூல் கராமத் நுாலில் இருந்து
(தொகுப்பு – செய்யிது ஆஷிக்குல்லாஷா கலீபா ரிபாஈ)