பாஜக கட்சியின் நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பு, நக்மா உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசியதாக திமுக நிர்வாகி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கே.கே.நகர் பகுதியில் திமுக சார்பில் கடந்த 26-ம் தேதி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், திமுக பேச்சாளர் சைதை சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது சைதை சாதிக் பேசும் போது பாஜகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நடிகை குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதுகுறித்த வீடியோ வைரலானது. இந்த பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி உடனடியாக கண்டனம் தெரிவித்தார். அத்துடன், வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த நிலையில் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 29ம் தேதியன்று புகார் அளித்தனர். அது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியான சைதை சாதிக் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகளை விமர்சனம் செய்து பேசிய திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.