Take a fresh look at your lifestyle.

நடிகர் விஷால் வீடு மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: 4 பேர் சிக்கினர்

69

நடிகர் விஷால் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஷாலின் வீடு சென்னை, அண்ணாநகர் டி பிளாக்கில் உள்ளது. கடந்த 26ம் தேதியன்று நள்ளிரவு 1 மணியளவில் விஷால் வீட்டு வெளியே முதல் மாடியில் இருக்கும் படிக்கட்டில் அமைத்துள்ள கண்ணாடியினை மாருதி ஸ்விப்ட் காரில் வந்த நபர்கள் சிலர் கல்லால் அடித்து உடைத்து விட்டு தப்பியோடி விட்டனர். அது தொடர்பாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் விஷாலின் மேனேஜர் அரிகிருஷ்ணன் புகார் அளித்தார். போலீசார் அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விஷாலின் வீட்டுப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் தொடர் விசாரணை மேற் கொண்டனர். அதனையடுத்து இந்தச் சம்பவத்தில் சென்னை, கொளத்தூர், சந்தோஷ் நகரைச் சேர்ந்த மீன் ஏற்றுமதி தொழில் செய்து வரும் பிரவீன்குமார் (29), அண்ணாநகர் வசந்தம் காலனியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சபரீஸ்வரன் (29), புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் மணிரத்னம் (28) மற்றும் அண்ணாநகரைச் சேர்ந்த மீன் வியா பாரி ராஜேஷ் (29) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை நேற்று பிடித்த போலீசார் விஷால் வீட்டில் கல் வீசியது தொடர்பாக விசாரணை நடத்தினர். குடிபோதையில் காரில் சென்ற போது நான்கு பேர்களுக்குள் தகராறு ஏற்பட்டதன் காரணமாக ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கிய போது அதில் ஒரு கல் நடிகர் விஷால் வீட்டின் மீது பட்டு விட்டதாக நான்கு பேரும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.