Take a fresh look at your lifestyle.

தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

77

தொழில் நிறுவனங்களை தொழில் அதிபர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:

‘‘1920 ம் ஆண்டு தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. 1920 என்பது மிகமிக முக்கியமான ஆண்டு. திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது முதன்முதலாக ஆட்சி அமைத்த ஆண்டு 1920 ம் ஆண்டு. அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உருவானது. இத்தகைய நீதிக்கட்சியைத் தொடங்கிய வெள்ளுடை வேந்தர் தியாகராயர் தான், 1909- ம் ஆண்டு சென்னையில் வர்த்தகப் பிரமுகர்களை அழைத்துப் பேசி முதன்முதலாகத் தென்னிந்திய வர்த்தகக் கழகத்தை உருவாக்கியவர்.

இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்துத் துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாகக் கொண்டுள்ளோம் என்றால், அதற்கு அரசியல் – சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும் – தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம். இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள்.

தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த பதினைந்து மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். அந்த வகையில்தான் தொழிலதிபர்களை – தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்தக் கூட்டமைப்பு அனைத்து முக்கியத் தொழிற்சங்கங்களுடன் சிறந்த உறவை பேணிப் பாதுகாத்து வருகிறது. மேலும், தொழில்துறை மற்றும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள், தொழிலாளர் நலன் குறித்த விவகாரங்களில், தொழிற்சங்கத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொழில்துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சமரச முறையின் வாயிலாக சுமுகமான உறவை ஏற்படுத்த தொழிலாளர் துறையானது நடவடிக்கை எடுத்து வருகிறது. உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்சார் வல்லுநர்கள் கொண்ட ஒரு குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

“தொழில் நடத்துவதில் எளிய நடைமுறை” என்பதை செயல்படுத்தி வருகிறோம். தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறையின் குறிக்கோள்களுக்கு வேலையளிப்போர் கூட்டமைப்பும் இணைந்து பணியாற்றுவது இன்றியமையாதது.

* குழந்தைகள் காப்பகம் அமைத்து பராமரிக்க முடியாத தொழிற்சாலைகள் அதிலிருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் பொது குழந்தைகள் காப்பகம் அமைத்துக் கொள்ள மகப்பேறு நல சட்டத்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு, வேலையளிப்போர் பங்களிப்புடன் தொழிலாளர் நலத் துறையினால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* தொழிலாளர்கள் மன அமைதியுடன் பணியாற்றவும், தங்கள் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாணும் பொருட்டும், தொழிலாளர்களின் குறைதீர்க்கும் இணையதள வசதி தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறையினால் ஏற்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது, வேலையளிப்போர் தாக்கல் செய்யக்கூடிய ஆண்டறிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த பதிவேடுகள் ஆகியவற்றை எளிய முறையில் சமர்ப்பிக்கும் வகையில், மேற்படி ஒவ்வொரு சட்டங்களின் கீழான நடைமுறையினை எளிமைப்படுத்தியுள்ளது.

* தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்போருக்குத் தொழிலாளர் துறையானது பல நன்மைகளைப் பயக்கும் வகையில் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் தலைசிறந்த இடத்தைத் தமிழகத் தொழில்துறை பெற வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசானது உங்களுக்கு வழங்கும். தொழிலை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் வளர்க்கும் கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு. அரசு, தொழிலதிபர்கள் – தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். இதுவே இந்த அரசினுடைய குறிக்கோள். இவற்றை நோக்கியே நாம் பயணிக்கிறோம். நூற்றாண்டு விழா காணும் இந்த அமைப்புக்கும், அமைப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தின், தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீகாந்த், துணைத்தலைவர் சஞ்சீவ் கே.மேனன், பொதுச் செயலாளர் கே.மாணிக்கம், சன்மார் குழும துணைத் தலைவர் என்.குமார், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் முதுநிலை நிபுணர் ரவி பைரிஸ், கேவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே. ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.