சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்போன் பறித்துக் கொண்டு தப்பமுயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையில் வசிக்கும் சேகர் (51). சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையிலுள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். சேகர் நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் இரவு பணியிலிருந்தார். நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் சேகர் ஓட்டலின் வெளியில் நின்றிருந்தார். அப்போது டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சேகரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். உடனே சேகர் சத்தம் போட்டுக் கொண்டே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபரை வசமாகப் பிடித்துக் கொண்டார். இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் வாகனத்தை கீழே போட்டு தப்பியோடிவிட்டார். உடனே அருகிலிருந்த பொதுமக்கள் உதவியுடன் செல்போன் பறிப்பு குற்றவாளியை இருசக்கர வாகனத்துடன் பிடித்து, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்போன் பறிப்பு குற்றவாளியை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதில் பிடிபட்ட நபர் சென்னை, அசோக்நகரைச் சேர்ந்த மனோஜ் (19) என்பதும் அவரது கூட்டாளியுடன் பைக்கில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனையடுத்து மனோஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய டியோ இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.