தேசிய அளவிலான விளையாட்டு, குதிரைப்படை போட்டிகளில் தங்கம் வென்ற சென்னை நகர காவல்துறை: கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு
தேசிய அளவிலான விளையாட்டு மற்றும் குதிரைப்படை போட்டிகளில் வெற்றி பெற்று தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்ற சென்னை நகர காவல் அதிகாரிகள், ஆளிநர்களை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
71வது அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டி (71st All India Police Wrestling Cluster Competition) 14.11.2022 முதல் 20.11.2022 வரை, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெற்றது. Boxing, Wrestling, Kabadi. Weight Lifting, Body building உட்பட 11 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழக காவல்துறை உட்பட பல மாநில காவல்துறை விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக காவல்துறை அணி சார்பாக கலந்து கொண்ட சென்னை பெருநகர காவல் அணியினர் தனி நபர் பிரிவில் 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 10 பதக்கங்கள் பெற்றனர். மேலும், தமிழக காவல்துறை, ஒட்டு மொத்தம் சாம்பியன் பட்டத்தில் (Overall Champion) Arm Wrestling பெண்கள் பிரிவினர் முதலிடமும், கபடி பெண்கள் அணியினர் 3ம் இடமும் பிடித்து, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்துக்கான கேடயத்தை பெற்றனர்.
இதே போல, 23.11.2022 முதல் 27.11.2022 வரை, மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் நடைபெற்ற 2வது தேசிய மூத்தோர் தடகள போட்டியில் (2nd National Veterans Sports & Games Championship) போட்டியில், சென்னை பெருநகர காவல், நவீன கட்டுப்பாட்டறையில் பணிபுரிந்து வரும் பெண் தலைமைக் காவலர் லீலாஸ்ரீ 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 1 தங்கப்பதக்கம், 100 மீ. தடை தாண்டும் ஓட்டம் மற்றும் 100 மீ. தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் 2 வெள்ளி பதக்கங்கள், குண்டு எறிதல் மற்றும் Hammer Throw ஆகிய பிரிவுகளில் 2 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்தார்.
மேலும், 14.11.2022 முதல் 26.11.2022 வரை, மத்திய பிரதேசம், குவாலியரில் நடைபெற்ற 41வது அகில இந்திய காவல் குதிரைப்படை போட்டி மற்றும் குதிரைப்படை பணி திறனாய்வு போட்டியில் (41st All India Police Equestrian Championship & Mounted Police Duty Meet) சென்னை பெருநகர காவல் குதிரைப்படை போட்டியில் சென்னை நகர திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையிலான குதிரைப்படையினர் கலந்து கொண்டனர். 4 தங்கம், 1 வெள்ளி , 2 வெண்கல பதக்கங்கள் மற்றும் 1 சுழற் கோப்பையை பெற்றனர். இதில் முதல்நிலைக் காவலர் மணிகண்டன் என்பவர் 2 பிரிவுகளில் தங்க பதக்கமும், 1 பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றார். இதே போல, முதல்நிலை பெண் காவலர் சுகண்யா சிறந்த பெண் குதிரை ஓட்டுநருக்கான (Best Women Rider) சுழற்கோப்பை மற்றும் மகிளா காவலர் பதக்கத்துக்கான தங்கப் பதக்கம் பெற்றார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் குதிரைப்படை போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (01.12.2022) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். அப்போது துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் ஆயுதப்படை துணைக்கமிஷனர் சவுந்திரராஜன் போட்டிப் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.