Take a fresh look at your lifestyle.

தூத்துக்குடி சிவன் கோவிலில் சாமி சிலைகள் திருடிய 8 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் * கும்பகோணம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

75

தூத்துக்குடி, சோமசுந்தரம் நித்ய கல்யாணி சிவன் கோவிலில் 3 சாமி சிலைகளை திருடிய 8 பேருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சேரகுளம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சோம          சுந்தரேஸ்வரர் நித்திய கல்யாணி சிவன் கோவிலில் நடராஜர் சிலை, சிவகாமி சிலை, தேவி சிலை ஆகியவை 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருடு போனது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி அய்யப்பன் புகாரின் பேரில் சேரகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு தொடர்பாக செல்லதுரை கணேசன், மாரியப்பன், முத்து என்கிற வேம்படிமுத்து, ராமகிருஷ்ணன் (எ)தாஸ், சண்முக வேலா யுதம், முருகன், பாலமுருகன், சங்கர், தினகரன். சதிஷ்குமார் ஆகிய 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடமிருந்து நடராஜர் சிலை, சிவகாமி சிலை, தேவி சிலை ஆகிய மூன்று உலோகச் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் போலீசார் தகுந்த சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கு நீதிமன்ற புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி தினகரன், எஸ்பி சக்தி கணேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சமீம்பானு, எஸ்ஐ ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கை கையாண்டனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய 7வது குற்றவாளி -முருகன் மற்றும் 10வது குற்றவாளி தினகரன் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். மேலும் ராமகிருஷ்ணன் (எ) தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். ஆகவே அவரை இவ்வழக்கில் இருந்து தனியாக பிரித்து விசாரணை நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

எதிரிகள் செல்லதுரை, கணேசன், மாரியப்பன், முத்து (எ) வேம்படிமுத்து, ராமகிருஷ்ணன் (எ) தாஸ், சண்முக வேலாயுதம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 7 ஆயி ரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்டத்தவறினால் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் எதிரிகள் பாலமுருகன், -சங்கர் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2,000- அபராதமும் கட்டத் தவறினால் 3 மாதம் கடுங் காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சிவசக்தி கண்ணன் தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்ட தனிப்படையினரை டிஜிபி சைலேந்திர பாபு வெகு வாக பாராட்டினார்.