Take a fresh look at your lifestyle.

தூத்துக்குடியில் கடத்தல் கும்பல் சினிமா பாணியில் சுற்றி வளைப்பு: காவல் அதிகாரிகளை பாராட்டிய எஸ்பி

307

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேரை காரில் கடத்திய கும்பலை சினிமா பாணியில் போலீசார் துரத்தி பிடித்து காரை சுற்றி வளைத்து 5 எதிரிகளை கைது செய்து, அந்த காரையும் பறிமுதல் செய்தனர்-.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் 2 பேரை காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து எஸ்பி பாலாஜி சரவணன் மாவட்ட காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து அந்த கும்பலை மடக்கிப் பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அனைத்து காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு கடத்தல்காரர்களை மடக்கிப் பிடிப்பதற்கு உஷார் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் TN 72 BM 5771 என்ற எண்ணுள்ள டாட்டா சுமோ கார் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலூரணி விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமாகவும் அதிவேகமாவும் சென்றது. அங்கு ரோந்து பணியிலிருந்த தூத்துக்குடி ஊரக காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர் அருள் ஜோசப் ஆகியோர் அந்த வாகனத்தை கண்டதும் மைக் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துக் கொண்டே சினிமா பாணியில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

அப்போது அந்த வாகனம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு காரசேரி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியிலிருந்த முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மடக்கி பிடிக்க முற்பட்டார். ஆனால் அந்த வாகனம் அவரிடமிருந்து தப்பிப்பதற்காக அப்படியே திரும்பி தூத்துக்குடியை நோக்கி சென்றுள்ளது. இதுகுறித்து மேற்படி உதவி ஆய்வாளர் அளித்த தகவலின்பேரில் தூத்துக்குடி தெய்வசெயல்புரம் பகுதியில் இருசக்கர ரோந்து வாகன பணியிலிருந்த முறப்பநாடு காவல் நிலைய காவலர்கள் கந்தசாமி மற்றும் கணேஷ் ஆகிய இருவரும் எதிர் திசையில் வந்த அந்த வாகனத்தை மடக்கி பிடிக்க சென்றனர்.

ஆனால் அந்த வாகனம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் பகுதியின் பின்புறம் வழியாக சென்று மீண்டும் வடக்கு காரசேரி பகுதியை நோக்கி தப்பிச்சென்றது. அதனையடுத்து அங்கு துரத்தி சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் முறப்பநாடு காவல் நிலைய இருசக்கர ரோந்து வாகன காவலர்கள் வடக்கு காரசேரி பகுதியில் வைத்து மேற்படி கடத்தல் வாகனத்தை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து உடனடியாக வடக்கு காரசேரி பகுதிக்கு விரைந்து சென்ற எஸ்பி பாலாஜி சரவணன் அவர்கள் மேற்படி வாகனத்தை சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கி பிடித்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர் அருள் ஜோசப் மற்றும் முறப்பநாடு இருசக்கர ரோந்து வாகன காவலர்கள் கந்தசாமி, கணேஷ் ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி, அந்த இடத்திலேயே அவர்களுக்கு வெகுமதி வழங்கினார்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்து கடத்தல் வாகனத்தை துரத்தி வந்த தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் ஆகியோரும் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து, கடத்தப்பட்ட 2 பேரையும் மீட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்தவர்களான சண்முகம் மகன் இசக்கிராஜா (32), ரவிச்சந்திரன் மகன் முத்துசெல்வகுமார் (28), செல்வின் மகன் லிவிங்ஸ்டன் (28), தூத்துக்குடி விளாத்திகுளம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சரவணன் (28) மற்றும் திருநெல்வேலி குலவணிகர்புரம் பகுதியை சேர்ந்த இம்மானுவேல் (27) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி 3ம் மைல் பகுதியை சேர்ந்தவர்களான மணிகண்டன் மகன் இசக்கி சூர்யா (எ) குட்டி (18) மற்றும் இஸ்ரவேல் மகன் வேதநாயகம் (18) ஆகிய இருவரையும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் to சோரீஸ்புரம் ரோடு பகுதியிலுள்ள ஒரு தனியார் குடோன் அருகில் வைத்து காரில் கடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.