Take a fresh look at your lifestyle.

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 8,400 பேர் பலி

54

துருக்கியிலும், சிரியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை 8,400 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளைத் தோண்டத் தோண்டப் பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற் பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. அங்கு பல்லாயிரக் கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. நிலநடுக்க மையப் பகுதிக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஹட்டாய் மாகாணத்தில் மட்டும் 1,500 கட்டிடங்கள் தரை மட்டமாகி இருக்கின்றன. இடிந்து தரை மட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளை நவீன எந்திரங்கள்உதவியுடன் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுவது. நெஞ்சை பிளக்கும் பெருந்துயரமாக மாறி இருக்கிறது. இடிபாடுகளில் படுகாயங்களுடன் குற்றுயிராக கிடந்தவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்விரு நாடுகளிலும் 2 ஆயிரத்து 300 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளி யாகின. ஆனால் நேற்று இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை (6,200) தாண்டி இருந்தது. இந்நிலையில் துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 4000மாக உயர்ந்துள்ளது. துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 5,894 பேர் மண்ணோடு புதைந்து இறந்திருக்கிறார்கள். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள் ளனர். உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களிலும், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். துருக்கியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள 10 தென் மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிறப் பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை அதிபர் தயீப் எர்டோகன் பிறப்பித்தார்.

முன்னதாக, துருக்கியில் ஒரு வார கால தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் தாயிப் எர்டோகன் அறிவித்துள்ளார். தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தென்கொரியா தேடல் மட்டும் மீட்பு படை யினை அனுப்புவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மீட்பு படையுடன் நிவாரண பொருட் களையும் விமானம் மூலம் அனுப்பிவைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) அங்காரா சென்று நேரில் அனுதாபம் தெரிவிக்கவிருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துருக்கி அதிபர் எர்டோகனை தொலைபேசியில் அழை த்து பேசி உதவிகள் அளிக்கப்படும் என உறுதிமொழி அளித்த கையோடு நிவாரண, மீட்புப்படைகளை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் இருந்து மருத்துவ குழு துருக்கி விரைகிறது. துருக்கிக்கு 65 நாடுகளில் இருந்து 2,660 பேர் மீட்பு, நிவாரண பணிகளுக்காக விரைவதாக துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரகால அமைப்பு ‘அபாட்’ தெரிவிக்கிறது.

இந்தியாவில் இருந்து துருக்கியில் மீட்பு, நிவாரண பணிகளை கவனிக்க டெல்லி அருகே யுள்ள காசியாபாத்தில் இருந்தும், கொல்கத்தாவில் இருந்தும் 101 பேரை கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று துருக்கி புறப்பட்டுச்சென்றனர். அவர்களில் பெண்களும் அடங்குவார்கள். இவர்கள் இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானத்தில் சென்றனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்பு பணியை மேற்கொள்வதுடன், உள்ளூர் அதிகாரிகள் கேட்கிற உதவிகளையும் செய்வார்கள் என தகவல்கள் கூறுகின்றன. இடிபாடிகளின் மீட்பு பணிகளில் உதவுவதற்காக 2 மோப்ப நாய்கள், தகவல் தொடர்பு சாதனங்களும் அனுப்பப் பட்டுள்ளன. துருக்கி ராணுவம், போலீஸ்,தீயணைப்பு படை என 26,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான கஹ்ராமன்மாராஸில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், அங்குள்ள டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட் மக்களை வீதிகளுக்கு வர வைத்ததுடன் வெகுதொலைவில் உள்ள கெய்ரோ வரை உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹட்டாய் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் விளையாட்டு மையங்களிலும், கண்காட்சி அரங்குகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். பல இடங்களில் இரவெல்லாம் மக்கள் திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். உயிரை உறைய வைக்கும் குளிர் வாட்ட, போர்வைகளைப் போர்த்திக்கொண்டு நெருப்பு மூட்டி அதில் குளிர் காய்ந்தனர். காசியான்டெப் நகரத்தில் மக்கள் வணிக வளாகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், மசூதிகளிலும், சமுதாய மையங்களிலும் அடைக்கலம் புகுந்தனர்.

துருக்கியில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு 3 லட்சம் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன. 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப கூடாரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் மூத்தஅதிகாரி கேத்தரின் கூறும்போது, ‘‘துருக்கி, சிரியாவில் அறிவிக்கப் பட்டிருக்கும் உயிரிழப்பு எண்ணிக்கையைவிட 8 மடங்கு அதிக பாதிப்பு இருக்கும் என்று கருதுகிறோம்’’ என்றார். இரு நாடுகளிலும் ஒவ்வொரு நிமிடமும் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டும் என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.