காவல்துறை சார்பில் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு அடுத்தடுத்த பதக்கங்களை எஸ்பி திருநாவுக்கரசு, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் பெற்றனர்.
தமிழக காவல்துறையில் 2022 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம் துப்பாக்கிச் சுடுதளத்தில் 08.09.2022ஆம் தேதி முதல் 10.09.2022ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறையில் உள்ள தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், வடக்கு மண்டலம் மற்றும் சென்னை பெருநகர காவல், தலைமையிடம், ஆயுதப்படை மற்றும் பெண்கள் பிரிவு என் மொத்தம் 8 அணிகளில் இருந்து சுமார் 220 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ரைபிள் பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆயுதப்படை அணி முதலிடத்தையும், 2ம் இடத்தை மத்திய மண்டலமும், மேற்கு மண்டலம் 3ம் இடத்தையும் பிடித்தது. பிஸ்டர் மற்றும் ரிவால்வர் பிரிவில் சென்னை நகர காவல்துறை முதலிடத்தையும், தலைமையிட அணி 2வது இடத்தையும், ஆயுதப்படை அணி 3வது இடத்தையும் பிடித்தன. மேலும் கார்பன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் தலைமையிட அணி 1வது இடத்தையும், வடக்கு மண்டல அணி 2வது இடத்தையும், ஆயுதப்படை அணி 3வது இடத்தையும் பிடித்தன.
இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் முதலிடத்தை தமிழ்நாடு ஆயுதப்படை அணியும், 2ம் இடத்தை தலைமையிட அணியும், 3வது இடத்தை சென்னை பெருநகர காவல் அணியும் பெற்றன. மேலும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில், ரிவால்வர் மூலம் 25 மீட்டர் தூரம் நின்றுகொண்டு சுடும் மற்றும் 30 மீட்டர் தூர படுத்துக் கொண்டு சுடும் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களும், நின்று கொண்டு சுடும் ரைபிள் பிரிவில் ஒரு வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை டிஜிபி சைலேந்திரபாபு வென்றார். அதோடு ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பட்டத்தையும் டிஜிபி சைலேந்திரபாபு பெற்றார்.
அதே போல 2ம் இடத்தை முதல்வர் பாதுகாப்புப்பிரிவு எஸ்பி திருநாவுக்கரசு, தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் 3வது இடத்தையும் பிடித்தனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுழற்கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பண வெகுமதிகள் வழங்கி சிறப்பித்தார். மாநில அளவில் நடந்த இந்தப் போட்டியில் வென்றவர்கள் வரவிருக்கும் தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக கலந்து கொள்ளவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழா ஏற்பாடுகளை செயலாக்கம் கூடுதல் டிஜிபி பாலநாகதேவி செய்திருந்தார். மேலும் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.