Take a fresh look at your lifestyle.

துணிவால் விபரீதம்: பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி: இளைஞர் கைது

112

துணிவு படத்தை பார்த்து திண்டுக்கல்லில் இன்று பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை ஒரு பெண் உள்பட 4 ஊழியர் கள் பணிக்கு வந்தனர். மற்ற ஊழியர்கள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த ஒரு இளைஞர் வங்கி ஊழியர்கள் மீது மயக்க ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடியை தூவினார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தனர். உடனே அந்த இளைஞர் மற்ற 3 ஊழியர்களை கையை கட்டிபோட முயன்றார். கொள்ளையனின் பிடியில் இருந்து தப்பித்த வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களை பார்த்து கொள்ளை, கொள்ளை என கூச்சலிட்டு அழைத்தார்.

உடனடியாக உள்ளே சென்ற பொதுமக்கள் அந்த இளைஞரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை ஒரு அறையில் வைத்து தர்மஅடி கொடுத்தனர். அவர் ஹிந்தியில் பேசியதால் வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று சந்தேகமடைந்தனர். இதனையடுத்து திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அதி விரைவுபடையினரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலில்ரகுமான் (25) என தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் “தான் பல்வேறு இடங்களில் வேலை பார்த்தும் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் பணக்காரன் ஆவதற்காக வங்கியில் கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்தேன். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தை பார்த்து அதேபோல வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்தேன்” என்றார்.

இதனைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து இளைஞர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.